குஜராத்தின் முந்த்ரா கடற்பகுதியில் ரூ.1,150 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது!

கடல்வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாக, குஜராத்தின் முந்த்ரா கடற்பகுதியில் சுமார் 115 கிலோ கொக்கைன் போதைப்பொருளை இந்திய கடலோரக் காவல் படையும், குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பும் (ஏடிஎஸ்) இணைந்து பறிமுதல் செய்துள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்களின் தோராயமான மதிப்பு சுமார் ரூ.1,150 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் ஏடிஎஸ் அமைப்பிற்கு கிடைத்த துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையில், கடலோரக் காவல் படையின் இடைமறிப்புப் படகுகள் மூலம் முந்த்ரா நங்கூரப் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது  . அப்போது அங்கிருந்த ஒரு சரக்குக் கப்பலில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இரு பாதுகாப்புப் படைகளும் இணைந்து மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் மூலம்,  அந்த கப்பலில் இருந்து கடலில் வீசப்பட்ட ஐந்து பைகள் மீட்கப்பட்டன.

அந்தப் பைகளைச் சோதித்த போது, தலா ஒரு கிலோ எடையுள்ள 115 வெள்ளை நிற போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடலோரக் காவல் படையும் ஏடிஎஸ் அமைப்பும் இணைந்து மேற்கொண்ட வெற்றிகரமான 15-வது போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும். ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற தேசிய இலக்கை அடைவதில் உள்ள கூட்டு அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளது.

Leave a Reply