கோவை சிறுமி கொடூர கொலை!-வைகோ கண்டனம்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (21.05.2026) மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமி அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இந்தச் சூழலில், நேற்று (22.05.2026) மாலை கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமி சடலமாகக் கிடந்துள்ளார்.

இந்தக் கொடூர நிகழ்வு தொடர்பாக காவல் துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்து இருக்கிறது.

சிறுமி கொடூரமாக சிதைத்துக் கொல்லப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய கொடூர நிகழ்வு கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இக்கொடிய குற்றங்களில் ஈடுபடுகின்ற கயவர்களுக்கு நீதிமன்றம் பிணை விடுதலை கொடுக்கக் கூடாது. இக்குற்றம் செய்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை என்று தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். அந்த நிலைப்பாட்டை மத்திய அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply