புரிதலும் இல்லை; புள்ளி விவரங்களும் தெரியவில்லை! முன்னாள், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்களின் புலம்பல்கள்..! -டாக்டர் துரை பெஞ்சமின் அவர்களின் சிறப்புக் கட்டுரை.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ((மே 13, 2026 ) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விரிவாக உரையாற்றிய இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக வாக்காளர்கள் 35 சதவீத நபர்கள் மட்டும்தான் வாக்களித்துள்ளார்கள். மற்றபடி 65 சதவீத மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளார்கள் எனவே, தமிழகத்தை ஆள்வதற்கு தவெகவிற்கு தகுதி இல்லை என்று ஒரு புள்ளி விவரத்தை இருவரும் சட்டசபையில் சத்தமாக பதிவுச் செய்து சென்றிருக்கிறார்கள். இதே கருத்தை தான் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தனது அறிக்கையின் மூலம் பொதுவெளியில் தொடர்ந்து பதிவுச் செய்து வருகிறார்.

கட்சித் தொடங்கி சுமார் 26 மாதங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, நெருப்பாற்றில் நீந்தி தமிழ்நாட்டில் 233 தொகுதிகளில் தன்னந்தனியாக போட்டியிட்டு வாக்காளர்களுக்கு பணமோ, பரிசுப் பொருட்களோ எதுவும் கொடுக்காமல் மக்களை மட்டுமே நம்பி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 34.92% (1,72,26,209) வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளை வென்று தமிழக அரசியலில் வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சி என்று வாய் கூசாமல் சொல்வதற்கு எப்படி தான் இவர்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை.

ஜம்போ சர்க்கஸ் மாதிரி 22 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை கூட்டணியில் இணைத்துக் கொண்டு 176 தொகுதிகளில் போட்டியிட்டு 24.19% (11929144) வாக்குகளைப் பெற்று 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக மட்டும் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியா? அப்படியானால் உங்கள் கருத்துப்படி 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் திமுக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்று தானே இதற்கு அர்த்தம்! இது தெரியாமல் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது எந்த வகையில் நியாயம்?

அடுத்து அஇஅதிமுகவை பார்ப்போம்: மத்தியில் ஆளுகின்ற பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளையும் மற்றும் சமூக அமைப்புகளையும் உள்ளடக்கி மிகப்பெரிய கூட்டணி அமைத்திருப்பதாக தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக, இந்த தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்டு 21.21% (10462146) வாக்குகளைப் பெற்று 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அப்படியானால் அவரின் கருத்துப்படி 78 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அஇஅதிமுக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்று தானே இதற்கு அர்த்தம்! இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு இந்த உண்மை கூடவா தெரியாமல் போனது!

24.19% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள திமுக தலைமையும், 21.21% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள அஇஅதிமுக தலைமையும் ஆட்சி அமைக்க ஆசைப்படும்போது, 34.92 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? நல்லா இருக்கியா உங்கள் நியாயம்.

திமுகவும், அஇஅதிமுக தலைமையும் தற்போதைய தேர்தல் தோல்விக்கு உண்மையானக் காரணங்கள் என்ன என்பதை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி மனசாட்சியோடு மறுபரிசீலனைச் செய்து கட்சியில் உள்ள குற்றம் குறைகளையும், கோஷ்டி பூசல் குளறுபடிகளையும் சரி செய்ய வேண்டுமே தவிர, வெற்றிப் பெற்ற கட்சியின் மீது அவதூறுகளைப் பரப்பி தமது கட்சியின் தவறுகளை மூடி மறைக்க முயலக் கூடாது.

தற்போது தவெகவைப் பார்த்து மூச்சுக்கு முந்நூறு தடவை மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு என்று கூச்சலிடும் திமுகவினருக்கு ஒன்றை நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். 2006 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் இதைவிட மோசமான நிலைமையில் திமுக அரசு இருந்ததை மறந்துவிடக்கூடாது. ஆம் 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக, பாட்டாளி மக்கள் கட்சியின் கருணையால் ஐந்தாண்டு காலம் ஆட்சியை நடத்தியதையும் அப்போதைய அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் கடும் விமர்சனத்திற்கு திமுக உள்ளானதையும் தமிழக அரசியல் வரலாறு என்றைக்கும் மறக்காது.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு உண்மையை நான் சொல்ல விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகு, திமுக மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி இல்லை என்பதை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆம், எப்பொழுதெல்லாம் அஇஅதிமுகவில் பிளவு மற்றும் பிரச்னைகள் ஏற்படுகிறதோ அப்பொழுது மட்டும்தான் திமுக தேர்தலில் ஜெயிக்கும். உதாரணத்திற்கு கீழே நான் இங்கு குறிப்பிட்டு இருக்கும் ஒரு சில தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தாலே இந்த உண்மை உங்களுக்கு தெரியும்.

எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜானகி மற்றும் ஜெ.ஜெயலலிதாவுக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அஇஅதிமுக பிளவு பட்டபோது திமுக வென்றது.

அடுத்து ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் மற்றும் மகாமகம் குளத்தில் சசிகலாவோட ஜெயலலிதா நீராடிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணம் மற்றும் அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் ஏற்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளால் அஇஅதிமுக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால் இடையிடையே திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு ஜெ ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2021 ல் திமுக வெற்றி பெற்றது அவ்வளவுதான்.

2006 சட்டமன்றத் தேர்தல் முடிவு விவரம்:

இத்தேர்தலில் 188 தொகுதிகளில் போட்டியிட்ட செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக 32.64% ((10768559) வாக்குகளைப் பெற்று 61 இடங்களில் வெற்றி பெற்றது. அதே தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 26.46% (8728716) வாக்குகளை மட்டுமே பெற்று 96 இடங்களில் வெற்றி பெற்றது.

அடுத்து 2011 சட்டமன்ற தேர்தலில் 165 இடங்களில் போட்டியிட்ட செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக 38.40% (14150289) வாக்குகளைப் பெற்று 150 இடங்களில் வெற்றி பெற்றது. அதே தேர்தலில் 124 தொகுதிகளில் போட்டியிட்டு 22.39% (8249991) வாக்குகளைப் பெற்று 23 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது.

அடுத்து 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக 40.77% (17616266) வாக்குகளைப் பெற்று 135 இடங்களில் வெற்றி பெற்றது. அதே தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 31.64% (13669116) வாக்குகளைப் பெற்று 88 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது.

அடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் 191 தொகுதிகளில் போட்டியிட்ட எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக 33.29% (15391055) வாக்குகளைப் பெற்று 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே தேர்தலில் 188 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 37.7% (17430179) வாக்குகளைப் பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சரானார்.

தற்போது நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 34.92% (17226209) வாக்குகளைப் பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. இதே தேர்தலில் 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 24.19% (11929144) வாக்குகளைப் பெற்று 59 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக 172 தொகுதிகளில் போட்டியிட்டு 21.21%(10462146) வாக்குகளைப் பெற்று கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 47 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதுதான் இரண்டு திராவிட கட்சிகளின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாறு!

நிலைமை இவ்வாறு இருக்க ச. ஜோசப் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை குறை சொல்வது “ஊசியைப் பார்த்து சல்லடை சொன்னதாம் உன் உடம்பில் ஒரு ஓட்டை இருக்கிறது என்று” அந்த கதையாகத்தான் இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோரின் விமர்சனங்கள்..!

என்ன செய்வது உண்மைகள் கசக்கத்தான் செய்யும் அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது!

Leave a Reply