இந்தியக் கடற்படையின் கடலியல் ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் சாகர்த்வனி, இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான வலுவான கடல்சார் மற்றும் அறிவியல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, 2026 மே 04 முதல் 08 வரை வியட்நாமின் காம் ரான் பகுதிக்கு மேற்கொண்ட தனது வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்தது.
இந்தப் பயணத்தின் போது, ஐஎன்எஸ் சாகர்த்வனி கப்பலின் கட்டளை அதிகாரி, கான் ஹோவா இராணுவக் கட்டளையின் துணைத் தலைவர் சீனியர் கர்னல் டிரான் வான் குவோங் மற்றும் 4-வது கடற்படை மண்டலத்தின் துணை அரசியல் ஆணையர் சீனியர் கேப்டன் நுயென் ஹு மின் ஆகியோரைச் சந்தித்தார். இந்தியா-வியட்நாம் மூலோபாயக் கூட்டாண்மையின் பத்தாண்டுகளை ஒட்டி, ஆழமான கடல்சார் ஈடுபாடு, தொழில்முறைத் தொடர்புகள், பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் முயற்சிகளுக்கான வழிகள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களில் முன்னிலைப்படுத்தப்பட்டன. சமீபத்தில், வியட்நாம் மக்கள் கடற்படை (VPN) கப்பல் ஒன்று, பிப்ரவரி 2026-ல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பு 26 மற்றும் மிலன் 26 ஆகியவற்றில் பங்கேற்றது.
தொழில்முறைப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, கட்டளை அதிகாரி, வியட்நாம் கடற்படை அகாதமியின் துணை இயக்குநரான மூத்த கேப்டன் ஹோ தான் ஹோவாவுடன் கலந்துரையாடினார். கடற்படைப் பயிற்சி மற்றும் கல்வியில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. அகாதமியின் அதிகாரிகளும் மாணவர்களும் கப்பலைப் பார்வையிட்டு, அதன் செயல்பாட்டுப் பங்கு மற்றும் கப்பலில் உள்ள திறன்கள் குறித்த புரிதலைப் பெற்றனர்.
நட்பு மற்றும் தோழமை உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், துறைமுகத்தில் தங்கியிருந்தபோது இந்தியக் கடற்படை மற்றும் வியட்நாம் மக்கள் கடற்படை வீரர்கள் நட்பு ரீதியான கைப்பந்துப் போட்டிகளிலும், கூட்டு யோகா அமர்வுகளிலும் பங்கேற்றனர்.
கடலியல் ஆய்வுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் உள்ள கடற்படை இயற்பியல் மற்றும் கடலியல் ஆய்வகத்தின் (NPOL) விஞ்ஞானிகள், நியா திராங்கில் உள்ள கடலியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடல்கள், கடலியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. துறைமுக வருகையின் போது, தேசிய கடலியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளும் கப்பலைப் பார்வையிட்டனர்.
இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையே பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இருதரப்பு கடல்சார் கூட்டாண்மை மற்றும் அறிவியல் ஈடுபாட்டிற்கு ஓர் சான்றாக அமைகிறது.
திவாஹர்
