2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பு 340% அதிகரித்துள்ளது என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று இங்கு தெரிவித்தார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு கடல்சார் பணியாளர் குழுவை உருவாக்குவதற்கான அரசின் உந்துதலையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
புது தில்லியில் நடைபெற்ற 10வது இந்தியப் பெருங்கடல் உரையாடலில் சிறப்புரையாற்றிய சோனோவால், இந்தியாவின் கடல்சார் வளர்ச்சிக் கதையின் மையத் தூணாக “நாரி சக்தி”யை எடுத்துரைத்தார். மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலுடன் , மொரிஷியஸின் வெளியுறவு அமைச்சர் மேதகு தனஞ்சய் ராம்ஃபுல் மற்றும் யேமனின் மாநில அமைச்சர் மேதகு வலீத் முகமது அல்-காதிமி ஆகியோரும் கலந்துகொண்டனர் .
“‘சாகர் மே சம்மான்’ போன்ற முன்னெடுப்புகள் மூலம், 2020-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 340% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள கடல்சார் துறையில், பெண்களுக்கான கண்ணியம், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்,” என்று சர்பானந்த சோனோவால் கூறினார். “பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலும் அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு தொழிலாளர் படையை உருவாக்க உதவுகிறது.”
பொருளாதார வளர்ச்சியை சமூக மேம்பாட்டுடன் இணைக்கும் இந்தியாவின் பரந்த கடல்சார் தொலைநோக்குப் பார்வைக்குள், பெண்களின் பங்கேற்பில் ஏற்பட்டுள்ள எழுச்சியை மத்திய அமைச்சர் நிலைநிறுத்தினார். பாதுகாப்பு, இணைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுடன், இந்தியாவின் கடல்சார் உத்தியில் “மனிதக் கூறு” மையமாகத் தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தியப் பெருங்கடல் என்பது வெறும் புவியியல் பகுதி மட்டுமல்ல, அது ஒரு உலகளாவிய உயிர்நாடி,” என்று சோனோவால் கூறினார். “உலகளாவிய எரிசக்திப் பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு அதன் முக்கியத்துவம், வலுவான ஒத்துழைப்பு, மீள்திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை அவசியமாக்குகிறது.”
பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், சமமான வளர்ச்சியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் மகாசாகர் போன்ற கட்டமைப்புத் திட்டங்கள் உட்பட, இந்தியாவின் கடல்சார் முன்னெடுப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்று சோனோவால் வலியுறுத்தினார்.
2025-27 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் (IORA) தலைவராக இந்தியா நடத்தும் 10வது இந்தியப் பெருங்கடல் உரையாடலின் கருப்பொருள், “மாறிவரும் உலகில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம்” என்பதாகும். இந்த மன்றம், கடல்சார் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம், பேரிடர் இடர் மேலாண்மை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது.
IORA-வின் இந்தியத் தலைமையின் கீழ், இந்த மன்றம் “புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை, மீள்திறன் மற்றும் தகவமைத்தல்” ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது; இதில் பெண்களின் பொருளாதார மேம்பாடு ஒரு முக்கிய, பல்துறை சார்ந்த முன்னுரிமைப் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஆகியவற்றில் இந்தியா எடுத்துள்ள முன்னெடுப்புகளைச் சுட்டிக்காட்டி, இப்பகுதியில் ஒரு “முழுமையான பாதுகாப்பு வழங்குநராக” இந்தியாவின் பங்கையும் சோனோவால் எடுத்துரைத்தார். கடல்சார் சவால்களை எந்தவொரு நாடும் தனியாகச் சமாளிக்க முடியாது என்று வலியுறுத்திய சோனோவால், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கான மதிப்பின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்.
“பாதுகாப்பான, உறுதியான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பங்காளர்களுடனும் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது,” என்று சோனோவால் கூறினார்.
2014-ஆம் ஆண்டு கொச்சியில் தொடங்கப்பட்ட, IORA-வின் முதன்மைத் திட்டமான டிராக் 1.5 தளமான இந்தியப் பெருங்கடல் உரையாடல் (IOD), முக்கிய பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. IORA-வில் 23 உறுப்பு நாடுகளும் 12 உரையாடல் கூட்டாளிகளும் உள்ளனர். இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. மேலும், நீலப் பொருளாதாரத்துடன் பெண்களின் பொருளாதார மேம்பாடும் ஒரு முக்கிய குறுக்குவெட்டு முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு மே 7-8 தேதிகளில் புது தில்லியில் நடைபெறவிருக்கும் இந்த உரையாடலின் 10-வது பதிப்பில், கடல்சார் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம், பேரிடர் இடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் பிரத்யேக அமர்வுகள் இடம்பெறுகின்றன.
எம்.பிரபாகரன்
