மேம்படுத்தப்பட்ட பயணிகள் முன்பதிவு முறைக்கு ரயில்களை மாற்றும் பணி ஆகஸ்ட் மாதம் தொடக்கம்.

இன்று ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். 40 ஆண்டுகள் பழமையான முன்பதிவு முறையிலிருந்து மேம்படுத்தப்பட்ட முறைக்கு ரயில்கள் மாறும் போது, பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் அறிவுரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய ரயில்வே இணையமைச்சர்களான திரு வி. சோமண்ணா மற்றும் திரு ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1986-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்புமுறை, கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும், தற்போது இது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதன் கொள்ளளவும் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே முன்பதிவு முறை பல முக்கிய மைல்கற்களைக் கண்டுள்ளது. 2002-ல், இந்திய ரயில்வே இணையவழியிலான  பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இன்று, இந்த முறை மிகவும் பிரபலமாகிவிட்டதால், பெரும்பாலான மக்கள் பயணச்சீட்டு மையங்களுக்குச் செல்வதில்லை. தற்போது, நாட்டின் மொத்த பயணச்சீட்டுத் தேவையில் கிட்டத்தட்ட 88% இணையவழி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்ஒன் செல்பேசி செயலி, பயணிகளிடையே வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில், இது நாடு முழுவதும் 3.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பதிவு செய்துள்ளது. 

இந்தச் செயலி சாமானிய மக்களுக்கு ரயில்வே தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வழங்குவது மட்டுமல்லாமல், பயணச்சீட்டு மற்றும் பிற சேவைகள் தொடர்பான புகார்களையும் தீர்த்து வைப்பது இதன் வெற்றிக்கு முக்கிய காரணம். நாடு முழுவதும் தினமும் இந்தச் செயலி மூலம் 9.29 லட்சம் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில் 7.2 லட்சம் முன்பதிவு செய்யப்படாத பயண சீட்டுகளும், 2.09 லட்சம் முன்பதிவு பயணச்சீட்டுகளும் அடங்கும்

Leave a Reply