தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!

ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆளுநர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில மாதங்களுக்கு முன் மேற்குவங்க மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரை நியமிக்காமல், கேரள மாநில ஆளுநர் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக, தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதனால் அவர் இரு மாநிலங்களின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். தற்போது கேரளத்திலும் சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெற்று, அங்கும் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க இருக்கிறது.

இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கான பணிகளில் அம்மாநில ஆளுநர் அர்லேகர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பதற்கான பணிகளிலும் ஆளுநர் அர்லேகர் ஈடுபட வேண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 12.20 மணியளவில் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக சென்னைக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புறப்பட்டார். அந்த விமானம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் வந்திறங்கியது.

அந்த விமானத்தில் வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் உள்வழியாக சென்னை பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர், சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்றார். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனிடையே நாளை காலை 11.30 மணிக்கு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

Leave a Reply