ஜப்பானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அமைச்சரும், விண்வெளிக் கொள்கைக்கான இணை அமைச்சருமான திருமதி. ஒனோடா கிமி, ஒரு உயர்மட்ட அதிகாரிகளின் குழுவுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகியவற்றுக்கான மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகியவற்றுக்கான இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் நோக்கம், பல்வேறு துறைகளில், குறிப்பாக சுகாதாரம் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதாகும்.
வளர்ந்து வரும் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களில் வலுவான கவனம் செலுத்திய உயர்மட்ட இருதரப்பு சந்திப்பின் போது, இந்தியாவும் ஜப்பானும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் தங்களது மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்தின.
இக்கூட்டத்தில், ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (AMED), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆகியவற்றுக்கு இடையே சுகாதாரம் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் ஒரு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoC) பரிமாறிக்கொள்ளப்பட்டது.
ஜப்பானின் அமைச்சரவை அலுவலகத்திற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும் (DST) இடையே குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இது அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அப்பயணத்தின்போது, தொழில் துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஜப்பான் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கூட்டாண்மையின் கீழ் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஒரு இயல்பான ஒருங்கிணைப்பு உள்ளது. ஜப்பான் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டுவரும் அதே வேளையில், இந்தியா திறமையான மனிதவளத்தின் ஒரு பெரும் தொகுப்பை வழங்குகிறது. நாம் இணைந்து, முன்னோடித் துறைகளில் புத்தாக்கத்தை விரைவுபடுத்தி, ஆராய்ச்சியை சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விளைவுகளாக மாற்ற முடியும்.
குவாண்டம் தொழில்நுட்பங்கள், சைபர்-பிசிக்கல் அமைப்புகள், மின்சார இயக்கம், தூய்மையான ஆற்றல் மற்றும் மேம்பட்ட கணினி ஆகிய துறைகளில் இந்தியாவின் விரிவடைந்து வரும் தேசியத் திட்டங்கள், ஆழ்தொழில்நுட்பத் துறைகளை நோக்கிய நாட்டின் வலுவான உந்துதலைப் பிரதிபலிப்பதோடு, கூட்டு ஆராய்ச்சி, இணை மேம்பாடு மற்றும் தொழில்துறை கூட்டாண்மைக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி ஒனோடா கிமி, இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியையும், புத்தாக்கத்திற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பையும், குறிப்பாக பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பெருமளவில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் பாராட்டினார். கல்வி நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் உட்பட, தனது இந்தியப் பயணம், தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புத்தாக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் திறனுடன், இளம் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவும் மீள்திறன் மிக்க வலுவான கலாச்சாரத்தைப் பிரதிபலித்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.
குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட உற்பத்தி மற்றும் கணக்கீட்டுத் தொழில்நுட்பங்களில் ஜப்பானின் பலம், இந்தியாவின் விரிவடைந்து வரும் தொழில்நுட்பச் சூழலுடன் நெருக்கமாகப் பொருந்துவதாக ஒனாடோ கிமி சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தின் போது, குறிப்பாக குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறைகளில் பரிமாறப்பட்ட ஒப்பந்தங்கள், ஆராய்ச்சி, பயன்பாடு மற்றும் தொழில்துறைச் செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆழமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கலந்துரையாடல்களின் போது, இந்தியாவின் தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குவாண்டம் கணினி, தகவல் தொடர்பு, உணர்தல் மற்றும் பொருட்கள் ஆகிய துறைகளில் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை முன்னெடுத்து வருவதுடன், நீண்ட தூர குவாண்டம் பாதுகாப்பான தகவல் தொடர்பு வலையமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு தரப்பினரும் விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
குவாண்டம் தொழில்நுட்பங்களின் தொழில்மயமாக்கல் மற்றும் தரப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முன்னெடுப்புகள் உட்பட, தனது குவாண்டம் புத்தாக்க மையங்களின் வலையமைப்பு குறித்த விவரங்களை ஜப்பான் பகிர்ந்துகொண்டதுடன், இந்திய நிறுவனங்களுடன் இணைப்புகளை உருவாக்குவதில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது. புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்காக, இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி மையங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
ஆராய்ச்சியாளர் பரிமாற்றம் மற்றும் கூட்டுப் புத்தாக்கத் தளங்கள் போன்ற தற்போதைய முன்னெடுப்புகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல்களில் விவாதிக்கப்பட்டது. இதில், இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஜப்பானில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைப் பயிற்சிகளை மேற்கொள்ள உதவும் திட்டங்களும் அடங்கும். கல்வி மற்றும் தொழில் துறை இணைப்புகளை வலுப்படுத்துவதில் இத்தகைய முன்னெடுப்புகளின் மதிப்பை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
சுகாதார ஆராய்ச்சி மற்றும் மருத்துவ தொழில்நுட்பத் துறையில், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி ஏற்பாடுகள் மூலம் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்தாலோசித்தனர். பரஸ்பர ஆர்வமுள்ள முன்னுரிமைப் பகுதிகளைக் கண்டறிவதற்காக, பயிலரங்குகள் மற்றும் ஆராய்ச்சியாளர் அளவிலான கலந்துரையாடல்கள் போன்ற நிறுவன வழிமுறைகளுடன், இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள அந்தந்த நிதி வழங்கும் முகமைகளால் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.
கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒத்துழைப்புடன், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை ஆதரிப்பதற்காக, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த ஒருமித்த புரிதலையும் இந்தக் கலந்துரையாடல் வெளிப்படுத்தியது.
இந்தியத் தரப்பில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் பஹல் ஆகியோரும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் குவாண்டம் முன்னெடுப்புகளுடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகளும் முக்கியப் பங்கேற்பாளர்களாக இருந்தனர்.
ஜப்பானிய தூதுக்குழுவில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கை செயலகத்தின் தலைமை இயக்குநர் திரு. ஃபுகுனாகா டெட்சுரோ, உலகளாவிய சுகாதாரத்திற்கான தூதர் திரு. ஹயாஷி டெய்ஜி போன்ற மூத்த அதிகாரிகளும், AMED மற்றும் இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்காக, ஆராய்ச்சியாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, நிறுவனக் கூட்டாண்மைகள் மற்றும் தொழில்துறை இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஈடுபாட்டைத் தீவிரப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதோடு, இக்கூட்டம் நிறைவடைந்தது.
எஸ்.சதிஷ் சர்மா
