பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வியட்நாமின் துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் ஃபான் வான் கியாங்குடன் மே 06, 2026 அன்று புது தில்லியில் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஆழமாக வேரூன்றிய மேம்படுத்தப்பட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த சந்திப்பு நெருக்கத்துடனும் வளர்ந்து வரும் மூலோபாய நம்பிக்கையுடனும் நடைபெற்றது.
இரு தலைவர்களும் நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ததோடு, உயர்மட்டப் பரிமாற்றங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாடுகளில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர். குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், மூலோபாய நலன்களில் வளர்ந்து வரும் ஒருமித்த தன்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மேம்படுத்தப்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் தொழில் கூட்டுறவை விரிவுபடுத்துதல், மற்றும் கூட்டு ஆராய்ச்சி, இணை மேம்பாடு, இணை உற்பத்தி முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. துறைமுக வருகைகள், கூட்டுப் பயிற்சிகள், மற்றும் நிறுவன ரீதியான உரையாடல் வழிமுறைகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான வழக்கமான தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் (மகாசாகர்) என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, வியட்நாமுடன் ஒத்துழைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். இரு தலைவர்களும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் விதி அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
X தளத்தில் பதிவிட்ட ஒரு செய்தியில், இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலு சேர்ப்பதில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தியதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார். சமீபத்திய முன்னேற்றங்கள் நமது உறவில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வரும் ஆண்டுகளில் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கும், ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் இந்தியாவும் வியட்நாமும் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
திவாஹர்
