கிராம பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களை (GPDPs) பசுமையாக்குதல் மற்றும் புதுமையான நிதியுதவி மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்து, அடிமட்ட பல்லுயிர் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (MoEFCC) தேசிய பல்லுயிர் ஆணையமும் (NBA) இணைந்து, ‘பல்லுயிர் பாதுகாப்பு உறுதிமொழிகளைப் பெறுவதற்கான நிறுவனத் திறன்களை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இத்திட்டம், இந்திய அரசு, உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு (GEF) மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இத்திட்டத்திற்கு 2025-2030 காலகட்டத்திற்கு 4.88 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிலப்பரப்புகளில் வேரூன்றியுள்ளது. தமிழ்நாட்டில், மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் நிலப்பரப்பு, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கி, வனவிலங்கு வழித்தடங்களின் நீண்டகாலப் பாதுகாவலர்களாக விளங்கும் வன விளிம்பு சமூகங்களை ஒன்றிணைக்கிறது. அவர்களின் ஆழ்ந்த சூழலியல் அறிவு, கிராம வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களில் (GPDPs) பயன்படுத்தப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தில் பல்லுயிர் பாதுகாப்புக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்படும். மேகாலயாவின் காரோ மலைப்பகுதியில், நொக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம், பால்பக்ரம் தேசியப் பூங்கா மற்றும் சிஜு வனவிலங்கு சரணாலயம் ஆகியவை இணைந்து, அரசு வனங்கள் மற்றும் காப்பு வனங்களின் ஒரு துடிப்பான கலவையாக அமைந்துள்ளன. இது, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இணையான கிராம வேலைவாய்ப்பு மன்றங்களில் (VECs) ஒருங்கிணைக்கப்பட்ட, சமூகம் தலைமையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு சிறந்த சூழலை வழங்குகிறது.
உள்ளூர் வளர்ச்சித் திட்டங்களில் பல்லுயிர்ப் பெருக்கத்தை முதன்மைப்படுத்துவதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களையும் (PRIs) பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களையும் (BMCs) வலுப்படுத்துவதும், வனத்துறைகள், வருவாய்த் துறையினர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, சமூகத்திற்குச் சொந்தமான, நிதியுதவி பெறும் பல்லுயிர்த் திட்டங்களை உருவாக்கும் நிலப்பரப்பு அளவிலான பலதரப்பு பங்குதாரர் தளங்களைக் கட்டமைப்பதும் இத்திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
பாதுகாப்பு மேலாண்மைக்கான நேரடி வெகுமதிகளாக, நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கும் அணுகல் மற்றும் பயன் பகிர்வு (ABS) ஏற்பாடுகள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) இணை நிதியுதவி மற்றும் பசுமை குறுந்தொழில்களைச் செயல்படுத்துவதன் மூலம் புதுமையான நிதி வழிமுறைகளை ஊக்குவிப்பது மற்றொரு முக்கிய நோக்கமாகும். மூன்றாவது நோக்கம், அறிவு மேலாண்மை மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது; பெண்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மற்றும் ஆளுகைப் பங்களிப்புகளை மேம்படுத்துவதில் பிரத்யேக கவனம் செலுத்தி, NBA மற்றும் MoEFCC தளங்கள் மூலம் நாடு தழுவிய அளவில் மீண்டும் செயல்படுத்துவதற்காக, இரு களங்களிலிருந்தும் புதுமைகளை முறையாகப் பதிவு செய்கிறது.
ஆளுகைக் கட்டமைப்பு, கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது; இதில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் முக்கிய நிர்வாகப் பங்கை வகிக்கின்றன. இத்திட்டம், இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் பாதுகாப்பு உத்தி மற்றும் செயல் திட்டம் (NBSAP 2024–2030), குன்மிங்-மான்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பு கட்டமைப்பின் மைல்கல்லான 30×30 இலக்கு, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs), மற்றும் தமிழ்நாடு தொலைநோக்கு 2030 மற்றும் மேகாலயா தொலைநோக்கு 2030 ஆகியவற்றின் இலக்குகளைச் செயல்படுத்துவதை முன்னெடுத்துச் செல்கிறது. இது, துறைகள் மற்றும் சமூகங்கள் முழுவதும் பங்கேற்பை உறுதி செய்வதற்காக ‘அரசு முழுமை’ மற்றும் ‘சமூக முழுமை’ என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது.
திவாஹர்
