தேர்தல் ஆணையத்தின் சர்வதேசத் தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான ஐஇவிபி 2026-ன் (IEVP -2026) ஒரு பகுதியாக, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல், மேற்கு வங்க முதல் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல்களை சர்வதேச பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதில் இந்திய தேர்தல்கள் மீது உலகளாவிய கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை, 16 நாடுகளைச் சேர்ந்த 32 சர்வதேசப் பிரதிநிதிகளும், ஜனநாயக தேர்தல் உதவிக்கான பன்னாட்டு அமைப்பு எனப்படும் ஐடிஇஏ அமைப்பினரும் பார்வையிட்டனர். இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளின் பிரம்மாண்டம், துல்லியம், உயிரோட்டம் ஆகியவற்றை அவர்கள் நேரடியாகக் கண்டனர்.
இந்த அனுபவத்தை “ஜனநாயகத்தின் உண்மையான திருவிழா” என வர்ணித்த பிரதிநிதிகள், சாதனை அளவிலான வாக்காளர் பங்கேற்பு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நுணுக்கமான திட்டமிடல், தடையற்ற தேர்தல் செயலாக்கம் ஆகியவற்றிற்காகத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவைக் கண்ட பிறகு, மொரிஷியஸ் தூதர் திருமதி ஷீலாபாய் பாப்பூ கூறுகையில், தேர்தல்களில் அனுபவம், செயல்முறைகள், அறிவு ஆகியவற்றை முழு உலகிற்கும் இந்தியா வழங்குகிறது என்று கூறினார்.
சர்வதேசப் பிரதிநிதிகள், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கான தங்களது இரண்டு நாள் பயணத்தை ஏப்ரல் 22, 23 ஆகிய நாட்களில் மேற்கொண்டனர். தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது மற்றும் வாக்குப்பதிவு ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர். நன்கு திட்டமிடப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கவனித்தனர்.
“வாக்குப் பதிவின்போது ஊழியர்கள் சுறுசுறுப்பாக இயங்கியதைக் கண்டு பிரமித்துப்போனேன். அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தேர்தல் மிகவும் வெளிப்படையாகவும் ஒழுங்காகவும் இருந்தது” என்று பிலிப்பைன்ஸ் பிரதிநிதி திருமதி மெலிசா ஆன் எம். டெலன், கூறினார். இவர் மேற்குவங்கத்தின், சிலிகுரியில் தேர்தல் நடைமுறைகளைப் பார்வையிட்டார்.
சர்வதேசப் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியுடனும், மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் மூத்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர். தேர்தல்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அமைதியான, சுமுகமான தேர்தலை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் போது, பிரதிநிதிகள் தேர்தல் ஏற்பாடுகளைப் பாராட்டினர். குறிப்பாக, முதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை ஒரு அற்புதமான முன்முயற்சி என்று பாராட்டினர்.
வாக்குச் சாவடிகளின் 100% இணைய ஒளிபரப்பைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ஊடக/இணைய ஒளிபரப்புக் கட்டுப்பாட்டு அறைகளையும் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். அவற்றை வெளிப்படைத்தன்மைக்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் அவர்கள் கூறினர்.
தேர்தல் நாளன்று காலையில், பிரதிநிதிகள் மாதிரி வாக்குப்பதிவைக் கவனித்தனர். அதைத் தொடர்ந்து, உண்மையான வாக்குப்பதிவு செயல்முறையைக் காண்பதற்காக, அவர்கள் தமிழ்நாட்டின் சென்னை, மேற்கு வங்கத்தின் சிலிகுரி, குர்சியோங் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்றனர்.
சாய்வுப் பாதைகள், சக்கர நாற்காலிகள், தன்னார்வலர்கள், குழந்தைகள் காப்பக வசதிகள் உள்பட வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட அம்சங்களுக்கு அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். அத்துடன் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக வாக்குச் சாவடிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
“நாங்கள் வாக்குச்சாவடிகளைக் கவனித்தோம்; அனைத்து வாக்குச்சாவடிகளின் நிர்வாகமும் மிகவும் சிறப்பாகவும் அருமையாகவும் உள்ளது” என்று சிலிகுரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியைப் பார்வையிட்ட நேபாளத்தின் பிரதிநிதியான திரு யக்ய பிரசாத் பட்டாராய் கூறினார்.
சென்னையில் உறுதிசெய்யப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டதையும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, வண்ணக் குறியிடப்பட்ட வாக்குச் சாவடிகளையும் பிரதிநிதிகள் பாராட்டினர்.
“தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு சிறப்பான வசதிகளை செய்திருந்தது” என்று சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியைப் பார்வையிட்ட பூட்டான் பிரதிநிதி திரு ஷெரிங் சம்ட்ரூப் கூறினார்.
மேற்கு வங்கத்தில், வாக்காளர்களுக்கான வசதி மற்றும் மேம்பட்ட வாக்களிப்பு அனுபவத்தை நோக்கமாகக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர்.
முன்னதாக, ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில், 22 நாடுகளைச் சேர்ந்த 38 பிரதிநிதிகள் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்குச் சென்று தேர்தலைப் பார்வையிட்டனர். இதன் மூலம், ஐஇவிபி2026-ன் ஒரு பகுதியாக, 38 நாடுகள் மற்றும் ஐடிஇஏ அமைப்பைச் சேர்ந்த மொத்தம் 70 பிரதிநிதிகள், தேர்தல் நடைபெற்று வரும் 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வருகை தந்தனர். இந்தியா இணையற்ற அளவில் தேர்தல்களை நடத்துவதிலும், சாதனை அளவிலான வாக்காளர் பங்கேற்பை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து புதிய அளவுகோல்களை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்து வருகிறது. இது உண்மையிலேயே ஜனநாயகத்தின் ஒரு பெரிய திருவிழாவாகும்.
ஐஇவிபி என்பது தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு முதன்மை முன்முயற்சியாகும். இந்தத் திட்டம், இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பு, நிறுவன வழிமுறைகள் மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதோடு, தேர்தல் மேலாண்மையில் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளையும் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது.
எம்.பிரபாகரன்
