வழக்கமாக ஓட்டுக்குப் பணம் கொடுத்து வேட்பாளர்கள், வாக்காளர்களை ஏமாற்றுவார்கள்! ஆனால், இந்தத் தேர்தலில் வேட்பாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்காளர்கள்; வேட்பாளர்களை ஏமாற்றப் போகிறார்கள்!
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை.
அதனால் தான் சொல்கிறேன், இது வழக்கமானத் தேர்தல் அல்ல! வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல்!
ஊடக வியாபாரிகளின் போலிக் கருத்துக்கணிப்புகளும்; வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் கூலிப்படையினரின் கூக்குரல்களும், இத்தேர்தலில் மௌனித்து மட்டுமல்ல; முற்றிலும் மரணித்துப்போகும்!
வாக்குக் கொடுத்து விட்டால் மீறக் கூடாது! கை நீட்டி காசு வாங்கி விட்டால் வாக்கை மாற்றக் கூடாது! என்ற சத்தியங்களும்; சம்பிதிரதாயங்களும் மக்களிடமிருந்து மலையேறிவிட்டது!
இத்தனைக் காலம் நம்மை ஏமாற்றியவர்களை; இப்போது நாம் ஏமாற்றுவது தவறல்ல! என்ற புரிதலும்; புதிய நீதியும் மக்களிடம் துளிர் விட ஆரம்பித்து விட்டது.
மடாதிபதிகள், ஆர்ச் பிஷப்புகள், ஆயர்கள், பண்ணையார்கள், பாதிரியார்கள், பாஸ்டர்கள், ஜோதிடர்கள், மதபோதகர்கள், மந்திரவாதிகள், மௌலானா மற்றும் ஜமாத் தலைவர்கள் இவர்கள் சொல்லி மக்கள் ஓட்டுப் போட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது! தற்போது மக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை!
அரசியல் ஒரு சாக்கடை! அது நல்லவர்களுக்கு சரிப்பட்டு வராது! என்ற மன நிலை தற்போது மக்களிடம் மாறத் தொடங்கி விட்டது.
அரசியலைக் கண்டு எல்லோரும் இப்படி ஒதுங்கி, ஒதுங்கி; ஒதுக்கி, ஒதுக்கிப் போனால் இதற்கு எப்போது தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்? என்ற கேள்வியை மக்கள் பரவலாக கேட்கத் தொடங்கி விட்டார்கள்!
இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத் தலைவிகள் இப்படி அனைவருமே வெளிப்படையாக அரசியல் பேசுகிறார்கள்! வெறித்தனமாக விவாதிக்கவும் செய்கிறார்கள்! இதுப் போன்ற சூழ்நிலையை தமிழகம் இதுவரைக் கண்டதில்லை!
அவற்றின் விளைவு! கைக்குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை தேர்தல் பிரசாரத்தைத் திண்ணைப் பிரசாரமாகவும், டிஜிட்டல் பிரசாரமாகவும் முன்னெடுத்து வருகின்றனர்.
வயது வந்தோர்களின் வாக்குரிமை எல்லாம் தற்போது குழந்தைகளின் வசிய வார்த்தைகளுக்கு வசமாகிவிட்டது!
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட; யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்!
யாரோ, எவனோ ஜெயிப்பதற்கு நான் ஏன் ஓட்டுப் போட வேண்டும்? என்று வேதனையாகவும், விரக்தியாகவும் இது நாள் வரைப் பேசியவர்கள் எல்லாம்! இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தாயகமான தமிழ்நாடு நோக்கி பல ஆயிரங்கள் மற்றும் பல லட்சங்களைச் செலவுச் செய்து சாரை, சாரையாய் சொந்த ஊர் வந்துக் கொண்டிருக்கிறார்கள்!
குழந்தைப் பிறந்தால் பிறக்கட்டும்! இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு தான் நான் மருத்துவமனைக்கு போவேன்! என்று அடம்பிடிக்கும் கர்ப்பிணிப் பெண்கள்!
அவசரமாக அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையிலும், அதை தேர்தல் தேதி வரை தள்ளி வைத்திருக்கும் தைரியசாலிகள்! இவையெல்லாம் இது நாள் வரை தமிழகத்தில் நடந்ததே இல்லை.
அதனால்தான் சொல்கிறேன், இது வழக்கமானத் தேர்தல் அல்ல! ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல்.
ஆம், இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எங்கும் நடக்காத அதிசயம் இத்தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம் நடக்கும்! வாக்குப் பதிவுச் சதவீதம் வரலாற்றுச் சாதனைப் படைக்கும்.
இத்தேர்தலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது வாக்காளர்கள் அல்ல: அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தான்! உண்மை கசக்கத்தான் செய்யும்; அதற்காக அதை நாம் சொல்லாமல் இருக்க முடியாது!
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
.editorutlmedia@gmail.com
