இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் 2026 ஏப்ரல் 21 முதல் 23 வரை ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார். இந்தப் பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் தனது ஜெர்மன் சகா திரு போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் அரசாங்கத்தின் பிற மூத்த தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், ராணுவங்களுக்கு இடையேயான ஈடுபாடுகளை வலுப்படுத்துதல், மற்றும் இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும். பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சி ஒத்துழைப்பைச் செயல்படுத்தும் ஏற்பாடு ஆகியவை இரு பாதுகாப்பு அமைச்சர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்பட வாய்ப்புள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை மீளாய்வு செய்வதற்கும், இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளைக் கண்டறிவதற்கும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பை வழங்கும். மேலும் , ‘மேக்-இன்-இந்தியா’ திட்டத்தின் கீழ் கூட்டு மேம்பாடு மற்றும் இணை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், திரு ராஜ்நாத் சிங் ஜெர்மன் பாதுகாப்புத் தொழில்துறையின் முக்கியப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
பாதுகாப்பு அமைச்சரின் இந்த பயணம் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெறுகிறது. இதற்கு முன்னர் ஒரு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டது, திருமதி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 2019-ல் ஆகும். திரு போரிஸ் பிஸ்டோரியஸ் ஜூன் 2023-ல் இந்தியாவுக்கு வருகை தந்து, திரு ராஜ்நாத் சிங்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவும் ஜெர்மனியும் ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் விதி அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு வலுவான மற்றும் பன்முக மூலோபாய கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தக் கூட்டாண்மையின் ஒரு முக்கிய தூணாக உருவெடுத்துள்ளது. இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்களிப்பதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
எஸ்.சதிஸ் சர்மா
