மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 2026-ஆம் ஆண்டுக்கான முதல் பிரிக்ஸ் சுகாதாரப் பணிக்குழு கூட்டத்தை புது தில்லியில் நடத்தியது.

இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புது தில்லியில் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் கட்டமைப்பின் கீழ் முதல் சுகாதாரப் பணிக்குழு (HWG) கூட்டத்திற்குத் தலைமை தாங்கியது. இக்கூட்டத்தில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மூத்த சுகாதார அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பிற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்து விவாதித்தனர்.

2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக, 2025 ரியோ உச்சிமாநாட்டில் மாண்புமிகு பிரதமர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட மக்கள் மைய மற்றும் மனிதநேயத்திற்கு முதலிடம் தரும் அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில், “மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்” என்ற பரந்த கருப்பொருளால் இந்தியா வழிநடத்தப்படுகிறது. பதிலளிக்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான கூட்டு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை இந்தக் கருப்பொருள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தனது தொடக்க உரையில், மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, அனைத்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளையும் வரவேற்றதோடு, பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக சுகாதாரப் பணிக்குழுவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற பிரிக்ஸ் சுகாதாரப் பணிக்குழுவின் கூட்டங்கள், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட அவசர சுகாதாரச் சவால்கள், சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல், மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு வழிவகுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள், பெருந்தொற்றுத் தயார்நிலை, சுகாதாரத் தொழில்நுட்பப் புத்தாக்கம், மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்

.

இந்த முன்னுரிமைப் பகுதிகள், பிரிக்ஸ் நாடுகளிடையே கூட்டுத் தயார்நிலை மற்றும் மீள்திறனை வலுப்படுத்துவதோடு, ஆராய்ச்சி, புத்தாக்கம், ஒழுங்குமுறை ஒத்திசைவு, டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் சமத்துவமான சுகாதாரப் பராமரிப்பு வழங்கல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

உறுப்பு நாடுகள் இந்தியாவின் தலைமைத்துவத்தையும், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் மீள்திறனைக் கட்டியெழுப்புதல் என்ற பொதுவான கருப்பொருளையும் வரவேற்றன. பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் மனநலத்தை மேம்படுத்துதல், அத்துடன் பாரம்பரிய, துணை மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவத்தை சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைத்தல் ஆகிய புதிய முன்னுரிமைகளுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்தன. பிரிக்ஸ் காசநோய் ஆராய்ச்சி வலையமைப்பின் மூலம் காசநோய் குறித்த ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், தொற்று நோய்களுக்கான பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை வலுப்படுத்துதல், அணுகலை மேம்படுத்துவதற்காக (குறிப்பாக தொலைதூர மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில்) டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மற்றும் ஒழுங்குமுறை ஒத்துழைப்பு மற்றும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் உள்ளூர் உற்பத்தியை முன்னெடுத்தல் ஆகியவற்றை அவை வலியுறுத்தின. அறிக்கைகள் முழுவதும், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, சமூகத்தால் தீர்மானிக்கப்படும் நோய்கள் மற்றும் சுகாதாரத்தின் பரந்த சமூகத் தீர்மானிகளை நிவர்த்தி செய்தல், மற்றும் சுகாதாரத் தொழில்நுட்பங்களுக்கான நியாயமான அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றை நாடுகள் பொதுவான இலக்குகளாக அடிக்கோடிட்டுக் காட்டின.

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய இலக்குகள் மற்றும் BRICS சுகாதாரப் பாதை 2026-இன் கீழ் தொழில்நுட்பக் கூட்டங்கள், அமைச்சர் மட்டத்திலான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட அடுத்தடுத்த சந்திப்புகளுக்கான ஒரு செயல்திட்டம் ஆகியவற்றின் மீது ஒருமித்த கருத்து எட்டப்பட்டு, இக்கூட்டம் நிறைவடைந்தது.

கூட்டாண்மை, புதுமை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் மூலம் பிரிக்ஸ் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது.

Leave a Reply