புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், துணை குடியரசுத் தலைவர் 2வது டாக்டர் அம்பேத்கர் நினைவு சொற்பொழிவை ஆற்றினார்.

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், “தேசத்தை உருவாக்கியவராக டாக்டர் அம்பேத்கர்: விஜித் பாரதத்தை நோக்கிய பாதைகள்” என்ற தலைப்பில் 2வது டாக்டர் அம்பேத்கர் நினைவு சொற்பொழிவை ஆற்றினார் . முன்னதாக, பாரத ரத்னா டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் அந்த மையத்தில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் தமிழ் புத்தாண்டு, பைசாகி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த துணை குடியரசுத் தலைவர், இந்த சந்தர்ப்பங்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன என்று கூறினார். டாக்டர் அம்பேத்கரை நவீன இந்தியாவின் மாபெரும் சிற்பிகளில் ஒருவராகவும், உண்மையான தேசத்தை உருவாக்கியவராகவும் வர்ணித்த அவர், அவரது பங்களிப்புகள் குடியரசுக்குத் தொடர்ந்து வழிகாட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விரிவுரைத் தொடரை ஏற்பாடு செய்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தைப் பாராட்டிய துணை ஜனாதிபதி, இதுபோன்ற முன்னெடுப்புகள் இளம் தலைமுறையினரை ஜனநாயகக் கொள்கைகளையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் நிலைநிறுத்த ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார். இந்த விரிவுரை, தேசத்தின் தார்மீக மற்றும் அறிவுசார் அடித்தளங்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை எடுத்துரைத்த துணை குடியரசுத் தலைவர், பெரும் இன்னல்களுக்கு மத்தியிலும், அவர் தனது விடாமுயற்சி, கல்வித்திறன் மற்றும் நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சவால்களை வாய்ப்புகளாக மாற்றினார் என்று கூறினார். சமூக மாற்றத்திற்கான திறவுகோல் கல்விதான் என்று டாக்டர் அம்பேத்கர் உறுதியாக நம்பியதாகவும், உண்மையான சுதந்திரம் கல்வியில் இருந்தே தொடங்குகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

துணை ஜனாதிபதி, டாக்டர் அம்பேத்கரின் அறிவுத்திறமையை வலியுறுத்திக் கூறினார். மேலும், அவரது முக்கியப் படைப்பான “ரூபாயின் பிரச்சினை” என்ற நூலையும் , காலனித்துவப் பொருளாதாரக் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கிய அவரது துணிச்சலையும் குறிப்பிட்டார். அறிவும் ஞானமும் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளையே எவ்வாறு சவால் செய்ய முடியும் என்பதை டாக்டர் அம்பேத்கர் நிரூபித்துக் காட்டினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய முக்கியப் பங்கைக் குறிப்பிட்ட துணை குடியரசுத் தலைவர், தனது விரிவான ஆலோசனைகளின் வழியான தலைமைத்துவத்தின் மூலம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றில் வேரூன்றிய அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கு அவர் அடித்தளமிட்டார் என்று கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உலகின் மிகவும் விரிவான ஜனநாயக சாசனங்களில் ஒன்று என்றும் அவர் விவரித்தார்.

அரசியலமைப்பு நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய துணை குடியரசுத் தலைவர், மாநிலங்களவைத் தலைவராகத் தனது பங்கைக் குறித்துப் பேசுகையில், ஜனநாயக நிறுவனங்கள் உரையாடல், விவாதம் மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் மூலம் செயல்பட வேண்டும் என்றார். நாடாளுமன்ற உரையாடல்கள் இடையூறுகளுக்குப் பதிலாக முடிவுகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தகவலறிந்த மற்றும் மரியாதைக்குரிய ஈடுபாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அரசியல் ஜனநாயகத்துடன் சமூக, பொருளாதார ஜனநாயகம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைத் துணை ஜனாதிபதி எடுத்துரைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிதி வலுவூட்டல் மற்றும் பின்தங்கிய பிராந்தியங்களின் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இத்தகைய முயற்சிகள் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாகவும் குறிப்பிட்டார்.

பாலின சமத்துவம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் முற்போக்கான தொலைநோக்குப் பார்வையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியதோடு, சமூக முன்னேற்றத்தின் ஓர் அளவுகோலாகப் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தையும் நினைவு கூர்ந்தார். பல்வேறு துறைகளில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பையும் சாதனைகளையும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஆதரிக்கும் அரசின் முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி பெற்ற இந்தியாவைக் கட்டியெழுப்பும் இலட்சியத்திற்கு, அரசியலமைப்பு விழுமியங்களால் வழிநடத்தப்படும் கூட்டு முயற்சி தேவை என்று துணை குடியரசுத் தலைவர் கூறினார். வளர்ச்சி பெற்ற இந்தியா அனைவரையும் உள்ளடக்கியதாகவும், சமத்துவமானதாகவும், புதுமையானதாகவும், ஜனநாயகக் கொள்கைகளில் வேரூன்றியதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பஞ்ச தீர்த்தங்களின் வளர்ச்சியை எடுத்துரைத்த துணை குடியரசுத் தலைவர், இந்தத் தளங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீடித்த உத்வேகத்தின் ஆதாரங்களாகத் திகழ்கின்றன என்றார். நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு குடிமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதுவே டாக்டர் அம்பேத்கருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் ஆகியோர் அறிஞர்கள், பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply