அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்ட வரைபடத்தை ஆய்வு செய்தார். இதன் மூலம், செயல்திட்ட அடிப்படையிலான திட்டங்கள், சமூகப் புத்தாக்கம் மற்றும் அறிவியல் அறிவை பொதுமக்கள் பரவலாக அணுகுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழலமைப்பின் அடுத்த கட்டத்திற்கான திசையை அவர் வகுத்தார்.
அறிவியலை சமூகத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், ஆராய்ச்சி முடிவுகள் எளிமையான, புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களில் வழங்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் குடிமக்கள் அவற்றின் பொருத்தத்தையும் தாக்கத்தையும் தெளிவாகக் காண முடியும் என்றும் வலியுறுத்தினார். இந்தத் திசையில், சிக்கலான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை, 18 இந்திய மொழிகளில் பாட்காஸ்ட்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்ட எளிய மொழி சமூக ஊடக உள்ளடக்கமாக மாற்றுவதற்காக, ANRF ‘SARAL AI’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தை உருவாக்கி வருகிறது. இது நாடு முழுவதும் அறிவியல் அறிவைப் பரவலாகப் பரப்புவதற்கு வழிவகுக்கும்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், ANRF தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சிவகுமார் கல்யாணராமன் , DST கூடுதல் செயலாளர் திரு சுனில் குமார் மற்றும் ANRF இணைச் செயலாளர் டாக்டர் நிஷாந்த் வர்மா ஆகியோருடன், மூத்த அதிகாரிகளும் முன்னணி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் .
முன்னுரிமைத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விளைவுகளை வழங்குவதற்காக, பெரிய அளவிலான, இலக்கு சார்ந்த முன்னெடுப்புகளாக வடிவமைக்கப்பட்ட பல ‘மகா’ ( அதிக தாக்கமுள்ள பகுதிகளில் முன்னேற்றத்திற்கான இயக்கம் ) திட்டங்களை ANRF தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது . இந்தத் திட்டங்கள், தெளிவான தேசிய முக்கியத்துவத்துடன், ஆரம்பகட்ட தொழில்நுட்பத் தயார்நிலையிலிருந்தே ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரசாங்கத்தை ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் ஒன்றிணைக்கின்றன.
அதனுடன், ANRF ஆனது “சமூகப் புத்தாக்கத்திற்கான பாய்ச்சல் செயல்விளக்கிகள்” என்ற பிரத்யேக மகா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டமானது, மாசுபாடு, காலநிலை மீள்திறன், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, பல்லுயிர்ப் பெருக்கம், நிலையான வேளாண்மை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு, சமூக நலம், தீவிர ஆற்றல் திறன் மற்றும் பொருளாதார உள்ளடக்கல் போன்ற முக்கிய சமூக சவால்களுக்கு, விரிவாக்கக்கூடிய, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளின் விரைவான மேம்பாடு மற்றும் செயல்விளக்கத்தில் கவனம் செலுத்தும்.
இந்த அறக்கட்டளையானது, வலுவான தேசிய அளவிலான பங்கேற்பைக் கண்டுள்ளதுடன், கடந்த நான்கு மாதங்களில், மேம்பட்ட ஆராய்ச்சி மானியம் (ARG) மற்றும் பிரதமரின் இளம்பருவ ஆராய்ச்சி மானியம் (PM-ECRG) போன்ற முதன்மை கிடைமட்டத் திட்டங்கள் உட்பட, ஏறத்தாழ 20,000 ஆராய்ச்சி விண்ணப்பங்களை மதிப்பீடு செய்துள்ளது. இது இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழலமைப்பின் வளர்ந்து வரும் வலிமையையும் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது.
அறிவியலை சமூகத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், ஆராய்ச்சி முடிவுகள் எளிமையான, புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களில் வழங்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் குடிமக்கள் அவற்றின் பொருத்தத்தையும் தாக்கத்தையும் தெளிவாகக் காண முடியும் என்றும் வலியுறுத்தினார். இந்தத் திசையில், ANRF ஆனது ‘சரல் ஏஐ’ (SARAL AI) என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தை உருவாக்கி வருகிறது. இது சிக்கலான ஆராய்ச்சி வெளியீடுகளையும் காப்புரிமைகளையும் எளிமையாக்கி, அவற்றை 18 இந்திய மொழிகளில் பாட்காஸ்ட்கள், குறும்படங்கள், சுவரொட்டிகள், வணிகச் சுருக்கங்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் செழுமையான சமூக ஊடக உள்ளடக்கங்களாக மாற்றுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அறிவியல் அறிவைப் பரவலாகப் பரப்ப முடிகிறது.
இந்திய ஆராய்ச்சியின் பரவலையும் அதன் தெரிவுநிலையையும் மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ANRF ஆனது ANRF PMECRG லைட்னிங் டாக் சீரிஸைத் தொடங்கியுள்ளது. இது, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படைப்புகளைச் சுருக்கமான மற்றும் ஈர்க்கும் வடிவங்களில் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. மேலும், இந்த அறக்கட்டளை, தொடக்க நிலை மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தவும், ANRF-ஆல் பெருக்கப்படும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதன் மூலம், குறிப்பிடத்தக்க பொது ஈடுபாட்டை உருவாக்கி, அவர்களைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
ஆராய்ச்சி செய்வதை எளிதாக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, செயல்முறைகளை எளிமையாக்கவும் நிர்வாகச் சுமையைக் குறைக்கவும் ANRF பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், முதன்மை ஆய்வாளர்களுக்கு ஆதரவளிக்கவும், ஆராய்ச்சித் திட்டங்கள் சீராகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் சுமார் 250 நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிப்பதும் அடங்கும்.
மேலும், தகவல் தொடர்பை வலுப்படுத்தவும், ஆராய்ச்சி சமூகத்திற்கு நிகழ்நேரத் தகவல்களை வழங்கவும், அதன் மூலம் தகவல்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் ANRF வாட்ஸ்அப் மற்றும் அரட்டை சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சியை நிஜ உலகப் பயன்பாடுகளாக விரைவாக மாற்றுவதையும், பொது நலனுக்காக அறிவைப் பரவலாகப் பரப்புவதையும் உறுதிசெய்யும் அதே வேளையில், வலுவான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, குறைவான, நன்கு கட்டமைக்கப்பட்ட, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முதன்மைத் திட்டங்களில் கவனம் செலுத்தும் ANRF-இன் அணுகுமுறையை இந்தக் கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
புகைப்படம் – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், திங்களன்று புது தில்லியில் உள்ள டெக்னாலஜி பவனில் நடைபெற்ற அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
எஸ்.சதிஸ் சர்மா
