இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான டஸ்ட்லிக்கிற்கு இந்திய ராணுவப் படைப்பிரிவு புறப்பட்டது.

இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான டஸ்ட்லிக்கின் 7 வது பதிப்பிற்காக இந்திய ராணுவப் படைப்பிரிவு இன்று புறப்பட்டது . இந்தப் பயிற்சி, உஸ்பெகிஸ்தானின் நமங்காமில் உள்ள குரும்சராய் களப் பயிற்சிப் பகுதியில், 2026 ஏப்ரல் 12 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டஸ்ட்லிக் பயிற்சி என்பது இந்தியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இதன் கடைசிப் பதிப்பு, 2025 ஏப்ரலில் அவுந்தில் (புனே) உள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது.

60 வீரர்களைக் கொண்ட இந்திய ஆயுதப் படைக் குழுவில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 45 வீரர்களும் (பெரும்பாலும் மகர் ரெஜிமென்ட்டின் ஒரு பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்), இந்திய விமானப் படையைச் சேர்ந்த 15 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். உஸ்பெகிஸ்தான் குழுவிலும், உஸ்பெகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த சுமார் 60 வீரர்கள் உள்ளனர்.

டஸ்ட்லிக் பயிற்சியின் நோக்கம், அரை மலைப்பாங்கான நிலப்பரப்பில் கூட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான இராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதும், ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துவதும் ஆகும். இது உயர் உடல் தகுதி, கூட்டுத் திட்டமிடல், கூட்டுத் தந்திரோபாயப் பயிற்சிகள் மற்றும் சிறப்பு ஆயுதத் திறன்களின் அடிப்படைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். மேலும், இந்தப் பயிற்சி, கூட்டு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும், இரு படைப்பிரிவுகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த செயல்பாட்டு வழிமுறையை உருவாக்கும்.

பயிற்சி செய்யப்பட வேண்டிய முக்கிய செயல்பாட்டு அம்சங்களில் தரைவழிப் போக்குவரத்து, எதிரித் தளங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் எதிரி வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுதல் ஆகியவை அடங்கும். இந்தியப் படைப்பிரிவினர், உஸ்பெகிஸ்தான் ஆயுதப் படைகளின் செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பயிற்சிகளை அறிந்துகொள்ளவும், தங்களது செயல்பாட்டு அனுபவங்களை உஸ்பெகிஸ்தான் படைப்பிரிவினருடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார்கள். சட்டவிரோத ஆயுதக் குழுக்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட கூட்டுச் சிறப்பு நடவடிக்கைகளுக்கான தயாரிப்பு மற்றும் செயல்படுத்தலுக்கு முக்கியத்துவம் அளித்து, கூட்டு நடவடிக்கைகளுக்கான தந்திரோபாயப் பயிற்சிகளைச் சரிபார்க்கும் நோக்கில் நடத்தப்படும் 48 மணி நேர சரிபார்ப்புப் பயிற்சியுடன் இந்தக் கூட்டுப் பயிற்சி நிறைவடையும்.

டஸ்ட்லிக் பயிற்சியானது, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளில் இரு தரப்பினரும் தங்களின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும். மேலும், இது படைப்பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, செயல்பாட்டு ஒத்திசைவு மற்றும் கூட்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும். இந்தப் பயிற்சியானது இரு நாடுகளின் வீரர்களிடையே நல்லுறவையும் தோழமையையும் வளர்க்க உதவும். இது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவையும் மேம்படுத்தி, இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும்.

Leave a Reply