இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தலையீடுகள் மூலம் பழங்குடியினரின் வாழ்க்கையை மாற்றுதல் – மொழி, நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, வடகிழக்கு தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் சென்றடைதல் மையம் (NECTAR) மற்றும் டேராடூனில் உள்ள ஐடிஐடிஐ டூன் சம்ஸ்கிருதி பள்ளி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது.
கூட்டத்தில் உரையாற்றிய துணை ஜனாதிபதி, அறிவியல் மனப்பான்மையும் தொழில்நுட்ப முன்னேற்றமும் பாரம்பரிய அறிவுடன் இணையும்போது அவற்றின் ஆற்றலை இந்த மாநாடு அழகாக வெளிப்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்தார். நவீன அறிவியல், மொழி, நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்துடன் இணக்கமாகச் செயல்படும்போது, அது பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக மாறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பழங்குடி சமூகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய துணை குடியரசுத் தலைவர், இந்தியாவில் சுமார் 1.4 லட்சம் பழங்குடி கிராமங்கள் இருப்பதாகவும், இது நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 9 சதவீதத்தை உள்ளடக்கியிருப்பதாகவும் கூறினார். பல்லுயிர் பெருக்கத்திற்கும், வன வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கும் துணைபுரியும் விலைமதிப்பற்ற பாரம்பரிய அறிவை பழங்குடி சமூகங்கள் கொண்டுள்ளன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், பல நூற்றாண்டுகளாக இந்த சமூகங்கள் இந்தியாவின் பண்டைய கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் நாகரிகப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பழங்குடியினர் பகுதிகள் பசுமைப் பொருளாதார வளர்ச்சிக்கு மகத்தான சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன என்று துணை ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், வடிவமைப்பு, ஜவுளி மற்றும் வண்ணக் கலவைகளில் பழங்குடியின சமூகங்களின் தலைசிறந்த திறன்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விக்ஸித் பாரத் @ 2047 தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிடுகையில், நவீன வளர்ச்சியும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல, மாறாக ஒன்றையொன்று பூர்த்தி செய்பவை என்பதை வலியுறுத்தி, “விகாஸ் பீ, விராசத் பீ” என்பதே அதன் வழிகாட்டும் கொள்கை என்று அவர் கூறினார்.
12வது மற்றும் 13வது மக்களவை உறுப்பினராக இருந்த தனது பதவிக்காலத்தை நினைவு கூர்ந்த துணை குடியரசுத் தலைவர், பழங்குடியினரின் மேம்பாட்டிற்குப் பங்களித்த சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் உருவாக்கத்தை ஆதரித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், பழங்குடியினர் சமூகங்களுக்கு நீதி, கண்ணியம் மற்றும் வாய்ப்பு வழங்குவதற்கான ஒரு தார்மீக அர்ப்பணிப்பு என வர்ணித்த பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தை நிறுவியதற்காக முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு அவர் புகழஞ்சலி செலுத்தினார்.
துணை ஜனாதிபதி அவர்கள், ஜார்க்கண்டில் உள்ள உலிஹாட்டுவில் அமைந்துள்ள பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த இடத்திற்குத் தாம் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும் பேசினார். மேலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புகளைத் தேசிய உணர்வின் முன்னணிக்குக் கொண்டு வந்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
அரசின் முக்கிய முன்னெடுப்புகளை எடுத்துரைத்த அவர், பிரதம மந்திரி-ஜன்மான் திட்டத்தைக் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ், ஏறக்குறைய 7,300 கி.மீ. நீளத்திற்கு 2,400-க்கும் மேற்பட்ட சாலைகளுக்கும், 160-க்கும் மேற்பட்ட பாலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 63,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களை உள்ளடக்கி, சுத்தமான குடிநீர், வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ‘தர்த்தி அபா – ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான்’ திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
ஐடிஐடிஐ டூன் சம்ஸ்கிருதி பள்ளியின் வெள்ளி விழா ஆண்டிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் இந்த நிறுவனம் திறந்து வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். உத்தரகாண்ட், வடகிழக்கு மற்றும் லடாக் முழுவதும் உள்ள பழங்குடியினக் குழந்தைகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்காக உருவெடுத்துள்ள இப்பள்ளியைப் பாராட்டிய அவர், இந்த நிறுவனத்தில் 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் இலவச தரமான கல்வியின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் ஸ்ரீ தரன்ஜித் சிங் சந்து; அருணாச்சல பிரதேசத்தின் துணை முதல்வர், ஸ்ரீ சௌனா மெய்ன்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர், பேராசிரியர் அபய் கரண்டிகர்; மற்றும் முன்னாள் எம்பி மற்றும் ஐடிஐடிஐ டூன் சமஸ்கிருதி பள்ளியின் நிறுவனர் அறங்காவலர் ஸ்ரீ தருண் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திவாஹர்
