மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தனது குவைத் நாட்டு சகா மேதகு திரு. உசாமா காலித் பூடாய் அவர்களுடன் காணொளி வாயிலாகக் கலந்துரையாடினார்.
கூட்டத்தின் போது, மோதலின் காரணமாக குவைத்தில் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதங்களுக்கு திரு கோயல் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவுவது ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா-குவைத் மூலோபாயக் கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்காக, வர்த்தகம் மற்றும் வணிகத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. பரந்த பொருளாதார ஒத்துழைப்பையும் பகிரப்பட்ட செழிப்பையும் முன்னெடுத்துச் செல்ல வலுவான இருதரப்பு உறவுகளே முக்கியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் குவைத் தலைமையின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
பேச்சுவார்த்தைக்கும் ராஜதந்திரத்திற்கும் முதன்மை அளிக்கப்பட வேண்டும் என்றும், எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்களில் ஏற்பட்டுள்ள தடைகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஒரு நம்பகமான கூட்டாளி என்ற முறையில், குறிப்பாக குவைத்தின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா உதவி வழங்கத் தயாராக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
திவாஹர்
