கட்டுமானத் துறையில் மாற்று எரிபொருட்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு .

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று, கட்டுமானத் துறையில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டின் எதிர்காலத்திற்காக மாற்று எரிபொருள்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

புது தில்லியில் நடைபெற்ற 17வது சிஐடிசி விஸ்வகர்மா விருதுகள் மற்றும் ‘விக்சித் பாரத் 2047’ கண்காட்சியில் உரையாற்றிய அமைச்சர், அறிவைச் செல்வமாக மாற்றுவதற்குப் புத்தாக்கம், தொழில்முனைவு, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் திறமையான நடைமுறைகள் அவசியம் என்று கூறினார். மேலும், தொடர்ச்சியான ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் கட்டுமானத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டுமானச் செலவைக் குறைப்பதன் அவசியத்தை வலியுறுத்திய திரு. கட்கரி, நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதும் செயல்முறைகளை மேம்படுத்துவதும் செயல்திறனை கணிசமாக அதிகரித்து, திட்டச் செலவுகளைக் குறைக்கும் என்று கூறினார். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு விரைவான முடிவெடுத்தல், சிறந்த திட்டமிடல் மற்றும் தரத்தின் மீதான வலுவான அர்ப்பணிப்பு ஆகியவை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்கட்டமைப்புத் திட்டங்கள் சீராகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகள் போன்ற முக்கிய முன்நிபந்தனைகளை முன்கூட்டியே முடிப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள அனுமதிகள் மற்றும் நடைமுறைத் தடைகளால் ஏற்பட்ட தாமதங்கள், திட்டக் கால அட்டவணைகளையும் ஒப்பந்ததாரர்களின் நிதி நிலையையும் கடுமையாகப் பாதித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

திட்டச் செயலாக்கத்தில் தர அடிப்படையிலான மதிப்பீட்டை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் திரு கட்கரி வலியுறுத்தினார். மேலும், செலவுக் கருத்தாய்வுகளுடன் தரம் மற்றும் செயல்திறனுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நீடித்த தீர்வுகளை வலியுறுத்திய அவர், உயிரி எரிபொருட்கள், உயிரிப் பொருள் சார்ந்த எரிபொருட்கள் மற்றும் பிற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஆராயுமாறு சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்தினார். இத்தகைய தொழில்நுட்பங்கள், வழக்கமான எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார். மேலும், சாலை கட்டுமானத்தில் நெகிழி கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்களை மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட, கழிவிலிருந்து செல்வம் உருவாக்கும் தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.

வெற்றிகரமான புத்தாக்கங்களைக் குறிப்பிட்ட அமைச்சர், நாக்பூரில் செயல்படுத்தப்பட்டவை போன்ற திட்டங்களில் சாலை கட்டுமானத்தில் நெகிழி கழிவுகளின் பயன்பாடு ஏற்கனவே நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது என்றும், இது உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நீடித்த பொருட்களின் ஆற்றலை நிரூபிக்கிறது என்றும் கூறினார்.

எதிர்காலத் தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சி அடிப்படையிலான தீர்வுகளையும் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் எடுத்துரைத்ததோடு, புதுமையான கட்டுமானத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காகத் தொழில்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறை ஆகியவற்றுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை ஊக்குவித்தார்.

துபாய், கத்தார் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகள் போன்ற நாடுகளில் முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி, இந்திய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் உலகளவில் தங்கள் திறமைகளை நிரூபித்துள்ளன என்று திரு கட்கரி குறிப்பிட்டார். உயர் தரத்தைப் பேணுவதும், குறுக்குவழிகளைத் தவிர்ப்பதும் இந்தியாவின் கட்டுமானத் துறையின் உலகளாவிய நற்பெயரை மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

விழாவில், அமைச்சர் 17வது சிஐடிசி விஸ்வகர்மா விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கி, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் தரம் மற்றும் புதுமைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவர்களைப் பாராட்டினார். இத்துறையுடன் தொடர்புடைய பொறியாளர்கள், கட்டுநர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply