மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ‘வதன் கோ ஜானோ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 250 பேர் கொண்ட இளைஞர் குழுவினர், இன்று புது தில்லியில் உள்ள உப்ரஷ்டிரபதி பவனில் இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.
‘வதன் கோ ஜானோ’ திட்டம் என்பது, ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
தூதுக்குழுவினரிடம் உரையாற்றிய துணை ஜனாதிபதி, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இத்தகைய துடிப்பான, திறமையான மற்றும் உறுதியான இளம் உள்ளங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். கடந்த மாதம் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்காக ஸ்ரீநகருக்குச் சென்றிருந்ததை நினைவு கூர்ந்த அவர், ஜம்மு காஷ்மீரில் பெண்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாகப் பேசினார்.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றதையும் துணை ஜனாதிபதி எடுத்துரைத்தார். கல்வியில் பெண்களின் தலைமை மற்றும் இளம் கிரிக்கெட் வீரர்களின் இதுபோன்ற விளையாட்டுச் சாதனைகள் ஆகியவை ஒன்றிணைந்து, ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் முற்போக்கான திசையை பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.
‘வதன் கோ ஜானோ’ திட்டத்திற்காக உள்துறை அமைச்சகத்தைப் பாராட்டிய அவர், இதுபோன்ற முன்னெடுப்புகள் இளைஞர்களைப் பொதுவான தேசிய அடையாளம் என்ற கருத்துடன் இணைக்க உதவுவது மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் லட்சியத்தையும் வளர்த்து, “ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்” என்ற உணர்வையும் மேம்படுத்துகின்றன என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரை அபாரமான இயற்கை அழகும், வளமான கலாச்சாரமும் கொண்ட பூமியாகச் சுட்டிக்காட்டிய அவர், ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கிய உலகளாவிய சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றார். கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் வாய்ப்புகள் விரிவடையும்போது, ஒவ்வொரு இளைஞரும் அமைதியான, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்குபவராக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார். அவர்கள் தங்கள் திறமைகளை நம்பவும், தங்கள் வேர்களுடன் இணைந்திருக்கவும், ஜம்மு காஷ்மீரை தேசத்திற்கு நல்லிணக்கம், வளர்ச்சி மற்றும் உத்வேகத்தின் சின்னமாக மாற்றுவதற்கு கூட்டாக உழைக்கவும் அவர் வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குடிமைப் பணிகள், ஐஐடி மற்றும் ஐஐஎம் நுழைவுத் தேர்வுகளில் சிறந்து விளங்குவது குறித்து துணை ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆரோக்கியமான இளைஞர்களே வலிமையான மற்றும் முன்னேற்றமான தேசத்தின் அடித்தளம் என்று வலியுறுத்திய அவர், மாணவர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்குமாறும், தங்கள் சக மாணவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இளம் பங்கேற்பாளர்கள் நிமிர்ந்து நிற்கவும், தம்மீது நம்பிக்கை கொள்ளவும், வளர்ச்சிமிக்க மற்றும் தற்சார்பு இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதில் பெருமிதம் கொள்ளவும் அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடையும்போதுதான் வளர்ச்சிமிக்க இந்தியாவை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கும் உடனிருந்தார். தூதுக்குழுவினரிடம் உரையாற்றிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட வளர்ச்சிப் பரிணாம மாற்றத்தை நினைவு கூர்ந்தார். மேலும், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் லட்சியங்கள் உயர்ந்துள்ளதாகவும், அவர்களில் பலர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
