இந்தியக் கடற்படையின் முன்னணி ஏவுகணைப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் தனது பணியின் ஒரு பகுதியாக, 2026 ஏப்ரல் 7 அன்று கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்தியாவுக்கும் கென்யாவுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேற்கு கடற்படை கட்டளையகத்தின் தலைமைத் தளபதியான துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் கென்யாவிற்கு மேற்கொள்ளும் பயணத்துடன் இந்தத் துறைமுக வருகையும் ஒருசேர நடைபெறுகிறது.
தங்கியிருக்கும் காலத்தில் தொழில்முறை, கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும், மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கென்யா பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்படும். அதுமட்டுமின்றி, கப்பலின் கட்டளை அதிகாரி மூத்த அரசு அதிகாரிகளையும் சந்திப்பார்.
மொம்பாசாவிலிருந்து புறப்படும்போது, ஐஎன்எஸ் திரிகண்ட், கென்யா கடற்படையின் பிரிவுகளுடன் ஒரு வழித்தடப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடும். இந்தப் பயிற்சி, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ள உதவுவதோடு , இருதரப்பு கடல்சார் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும்.
ஐஎன்எஸ் திரிகண்டின் இந்தத் துறைமுக வருகையானது , பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் என்ற இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது .
திவாஹர்
