இந்திய கடற்படைக் கப்பலான திரிகண்ட், தான்சானியாவின் டார்-எஸ்-சலாம் துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

இந்தியக் கடற்படையின் முன்னணி ஏவுகணைப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் தனது பணியின் ஒரு பகுதியாக, 2026 ஏப்ரல் 3 அன்று தான்சானியாவின் டார்-எஸ்-சலாம் நகருக்கு வந்தடைந்தது. இந்தியாவுக்கும் தான்சானியாவுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

துறைமுக வருகையின் போது நடைபெறும் நிகழ்வுகளில், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தான்சானியா கடற்படையுடன் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் போன்ற தொழில்முறை கலந்துரையாடல்களும் அடங்கும். மேலும், நட்புரீதியான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் யோகா உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் சமுதாய நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. நல்லெண்ணத்தையும், மக்களுக்கிடையேயான தொடர்புகளையும் வளர்க்கும் வகையில், கப்பலில் ஒரு கலாச்சார மாலை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் இந்தப் பயணத்தின்போது ஒப்படைக்கப்படும்.

கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் சச்சின் குல்கர்னி, தான்சானியா மக்கள் பாதுகாப்புப் படைகள் மற்றும் தான்சானியா ஐக்கிய குடியரசின் அரசாங்கத்தின் மூத்த பிரமுகர்களைச் சந்திப்பார்.

ஐஎன்எஸ் திரிகண்டின் இந்தத் துறைமுக வருகையானது , பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் என்ற இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது .

Leave a Reply