இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டம் மோதிஹாரியில் இன்று நடைபெற்ற மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் 3வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.
இந்தியாவின் வரலாற்றில் சம்பாரன் ஒரு சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது, ஏனெனில் இங்குதான் மகாத்மா காந்தி ஒரு வழக்கறிஞர் நிலையிலிருந்து இந்தியாவின் கிராமங்களில் வேரூன்றிய ஒரு மக்கள் தலைவராக உருமாறினார் என்றும், சம்பாரன் சத்தியாகிரகம் உண்மை, தைரியம் மற்றும் நீதியின் மூலம் தேசத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது என்றும் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பீகாரின் வளமான அறிவுசார் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை எடுத்துரைத்த துணை ஜனாதிபதி, இந்தப் புனித பூமியில்தான் கௌதம புத்தர் ஞானம் பெற்றார் என்றும், இங்குதான் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் உலகளாவிய கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றும், சாணக்கியர் போன்ற மாபெரும் சிந்தனையாளர்கள் உருவானார்கள் என்றும் கூறினார்.
மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்திற்குப் பெயரிடுவது, காந்திஜியின் சமூக நீதி, கிராமப்புற மேம்பாடு மற்றும் அறநெறித் தலைமை ஆகிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு ஆழ்ந்த குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்று துணை ஜனாதிபதி கூறினார். மேலும், இப்பகுதியில் கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றிய மகாராணி ஜானகி குன்வரின் கொடைத்தன்மையையும் நில நன்கொடையையும் அவர் நினைவு கூர்ந்தார். அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட தாராள மனப்பான்மை, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகம் 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்தி, புதிய ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியிருப்பது குறித்துத் துணைத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய அறிவு அமைப்புகள் மையம் நிறுவப்பட்டதையும், ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் விளையாட்டு மற்றும் உடற்தகுதிக்கு பல்கலைக்கழகம் அளிக்கும் முக்கியத்துவத்தையும் அவர் பாராட்டினார். மேலும், இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரு திட்டங்களிலும் பல்கலைக்கழகத்தின் முதல் இடங்களைப் பிடித்தவர்கள் பெண் மாணவியர் என்பது, நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறி, அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பட்டம் பெறும் மாணவர்களிடையே உரையாற்றிய துணை ஜனாதிபதி, பட்டமளிப்பு விழா என்பது கல்வியின் முடிவல்ல, மாறாக வாழ்நாள் முழுவதற்குமான கற்றல் பயணத்தின் தொடக்கமாகும் என்று கூறினார். தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வேகமாக மாறிவரும் உலகில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற துறைகள் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் திறக்கின்றன என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
‘தேசம் முதலில்’ என்ற வழிகாட்டும் கொள்கையை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, ஆரோக்கியமான மற்றும் வலுவான சமுதாயத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இன்றைய உலகில், காந்திஜியின் அகிம்சை கொள்கை மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்றும், அது நமது செயல்களுக்கு மட்டுமல்லாமல், டிஜிட்டல் உலகில் நமது நடத்தைக்கும் வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பீகார் ஆளுநர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன்; மாநிலங்களவையின் துணைத் தலைவர், திரு ஹரிவன்ஷ்; பீகார் துணை முதலமைச்சர், திரு சம்ராட் சௌத்ரி; மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர், திரு சதீஷ் சந்திர துபே; பீகார் கல்வி அமைச்சர், திரு சுனில் குமார்; கிழக்கு சம்பாரன் நாடாளுமன்ற உறுப்பினர், திரு ராதா மோகன் சிங்; பல்கலைக்கழகத்தின் வேந்தர், டாக்டர் மகேஷ் சர்மா; இவர்களுடன் பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
துணை குடியரசுத் தலைவர் சர்க்கா பூங்கா மற்றும் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி சத்தியாகிரக ஸ்மராக் ஆகிய இடங்களுக்கும் சென்று, சம்பாரன் சத்தியாகிரகத்தின் போது மகாத்மா காந்தியின் தலைமைக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், சத்தியம், அகிம்சை மற்றும் தேச சேவை ஆகிய அவரது நிலையான செய்திகளை நினைவு கூர்ந்தவாறும் மலர் அஞ்சலி செலுத்தினார்.
திவாஹர்
