மைசூரு, ஏப்ரல் 3: தொழில்நுட்பம் மற்றும் அடிமட்டத் திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்ததால், இந்தியாவின் சிறுதானிய முன்னெடுப்புக்கு இன்று இரட்டை நிறுவன ரீதியான ஊக்கம் கிடைத்தது. இந்தியத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட சிறுதானிய சமையல் குறிப்புகள், மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட சர்வதேச உணவுச் சங்கிலிகளால் பரிமாறப்படுகின்றன என்பதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரிலிருந்து உருவான பிரபலமான பாலாடைக்கட்டி தயாரிப்பான ‘களரி’யிலிருந்து, அதுபோன்ற நிலையான உணவு செய்முறைகளை உருவாக்கும் பணியில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இங்குள்ள மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள, நாட்டின் முதல் சிறுதானியங்களுக்கான பிரத்யேக ‘சிறப்பு மையத்தை’ பார்வையிட்டபோது, டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மையத்தின் புத்தாக்கங்கள் ஏற்கனவே உலகளாவிய உணவுச் சங்கிலிகளில் நுழைந்துவிட்டதாகவும், இனி அதன் பரவலை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்காக ஒரு புதிய உறைவிடப் பயிற்சிச் சூழல் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, பயிற்சியாளர்கள், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் சுயஉதவிக் குழுக்களை இலக்காகக் கொண்ட திறன் மேம்பாட்டு விரிவாக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனாவின் (RKVY) கீழ் 30 ஒற்றை அறை தங்கும் விடுதி வசதிக்கான பூமி பூஜையை அமைச்சர் நிகழ்த்தினார். மேலும், பாரம்பரிய பயிர்களை பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய, சந்தைக்குத் தயாரான பொருட்களாக மாற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக இந்த நிறுவனத்தின் சிறுதானியச் சூழல் அமைப்பை அவர் முன்வைத்தார்.
எம்.ஜி. ஹள்ளி வளாகத்தில் அமையவிருக்கும் தங்கும் விடுதி வளாகத்தில், சுமார் 50 பங்கேற்பாளர்களுக்கான வசதி, தங்குமிடம், சமையலறை மற்றும் உணவருந்தும் உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும். இது ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியானது, தங்கிப் பயிலும் பயிற்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குறிப்பாக தங்குமிட வசதிக்கு பணம் செலுத்த முடியாதவர்கள் உட்பட, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்பதை இது சாத்தியமாக்குவதோடு, உணவு பதப்படுத்துதல், தொழில்முனைவு மற்றும் மதிப்புக்கூட்டல் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டையும் வலுப்படுத்தும்.
கட்டமைக்கப்பட்ட பயிற்சிக்கான அதிகரித்து வரும் தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்கிறது என்றும், இந்த நிறுவனம் ஏற்கனவே ஆண்டுதோறும் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்களுக்காக டஜன் கணக்கான திட்டங்களை நடத்தி வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் திறன் இந்தியா மற்றும் வாழ்வாதார உருவாக்க முயற்சிகளுடன் இணைந்த, செய்முறை மற்றும் ஆழ்ந்த பயிற்சிக்கு இந்த உறைவிட வடிவம் வழிவகுப்பதால், பங்கேற்பையும் அதன் விளைவுகளையும் இது கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்தியின் மையத்தில் சிறுதானியங்களை நிலைநிறுத்தி, டாக்டர் ஜிதேந்திர சிங், CFTRI-இல் உள்ள சிறப்பு மையத்தை “உலகளவில் இது போன்ற முதல் மையமாக இருக்கலாம்” என்று விவரித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுதானிய ஆண்டு பிரகடனம் உட்பட, சர்வதேச சிறுதானிய இயக்கத்திற்கு இந்தியா தலைமை தாங்கி வரும் ஒரு காலகட்டத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். பாரம்பரிய தானியங்களை, “இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த, அதே சமயம் சுவைமிக்க” நவீன உணவுப் பொருட்களாக எவ்வாறு மாற்றலாம் என்பதை இந்த நிறுவனம் நிரூபித்துள்ளது என்றும், உலகளாவிய உணவுச் சங்கிலிகள் இவற்றை ஏற்றுக்கொள்வது அவற்றின் வணிக சாத்தியக்கூறுகளையும் நுகர்வோர் ஏற்பையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறுதானியங்களுக்கான சிறப்பு மையத்திற்கு வருகை தந்தபோது, டாக்டர் ஜிதேந்திர சிங், அவ்விடத்தின் ஒருங்கிணைந்த பதப்படுத்தும் உள்கட்டமைப்பை ஆய்வு செய்தார். இதில் ஏழு பதப்படுத்தும் வழித்தடங்களும், அனைத்து முக்கிய சிறுதானியங்களையும் முழுமையாக முதல் மற்றும் இரண்டாம் நிலை பதப்படுத்துவதற்கு உதவும் ஒரு பிரத்யேக ஆய்வகமும் அடங்கும். இந்த மையம், சுத்தம் செய்தல், உமி நீக்குதல், மெருகூட்டுதல் மற்றும் தரம் பிரித்தல் ஆகியவற்றுக்கும், அத்துடன் செதில்கள், பிழிந்தெடுக்கப்பட்ட பொருட்கள், பேக்கரிப் பொருட்கள் மற்றும் ரவை போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் சிறப்பு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இது சிறுதானிய மாவின் சேமிப்புக் காலத்தை சுமார் ஒரு மாதத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மாதங்களாக நீட்டித்து, அதன் வணிக ரீதியான சாத்தியக்கூறை கணிசமாக மேம்படுத்தும் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ளது. தானியங்கி செயல்பாடுகள் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 300 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலான பதப்படுத்தும் திறனுடன், இந்த மையம் விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் சந்தைக்குத் தயாரான சிறுதானிய அடிப்படையிலான பொருட்களை உருவாக்க ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
RKVY திட்டத்தின் கீழ் ₹20 கோடி நிதியுதவியுடன் இயங்கும் இந்த சிறுதானிய ஆலை, ஒன்பது வகையான சிறுதானியங்களையும் ஒரே அமைப்பில் கையாளும் திறன் கொண்ட மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. ஒரு நாளைக்கு 60-70 டன் சுத்தம் செய்யும் திறன் மற்றும் 12-15 டன் அரைக்கும் திறன் கொண்ட இது, சுகாதாரமான, தானியங்கிச் சூழலில் மாவு, ரவை (சூஜி மற்றும் ரவா), தவிடு உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்களை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், இது அதிக ஊட்டச்சத்து தக்கவைப்பு, மேம்பட்ட சேமிப்புக் காலம் மற்றும் தொழில்துறை அளவிலான செயல்திறனையும் உறுதி செய்கிறது.
இத்தகைய தொழில்நுட்பங்களைச் சுற்றியுள்ள வணிக மற்றும் தொழில்முனைவோர் சூழலமைப்பை விரிவுபடுத்துவதில்தான் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். மாறிவரும் நகர்ப்புற நுகர்வுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, உடனடியாக உண்ணக்கூடிய மற்றும் வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடிய உணவுப் பொருட்கள் போன்ற வளர்ந்துவரும் பிரிவுகளில், குறிப்பாக டிஜிட்டல் பரவல் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (MSMEs) இலக்கு வைக்கப்பட்ட ஈடுபாடு உள்ளிட்ட வலுவான அணுகுமுறைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சி.எஃப்.டி.ஆர்.ஐ போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அதிக அளவிலான வணிக ரீதியான பயன்பாட்டுடன் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், இப்போது பரந்த சந்தை அணுகலையும் கடைநிலை விநியோகத்தையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களைத் தாண்டி, குறிப்பாக விவசாயிகள், மகளிர் குழுக்கள் மற்றும் சிறு நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் வாழ்வாதாரங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட இரட்டை முன்னெடுப்புகளான, உலகளாவிய தரத்திலான சிறுதானியப் புத்தாக்கத் தளம் மற்றும் அதற்கென பிரத்யேகமான உறைவிடப் பயிற்சி மையம் ஆகியவை, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் உருவாக்கம் ஆகியவற்றை இணைத்து, உணவுக் கொள்கைக்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உணர்த்துகின்றன. சிறுதானிய மையம், மதிப்புக்கூட்டப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த தயாரிப்புகளுக்குத் தொழில்நுட்ப முதுகெலும்பை வழங்கும் அதே வேளையில், இந்த உறைவிட வசதியானது, இந்தப் புத்தாக்கங்களை களத்தில் ஏற்றுக்கொண்டு விரிவுபடுத்தும் திறன் கொண்ட, பயிற்சி பெற்ற பங்குதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய பயிர்கள் மற்றும் நிலையான ஊட்டச்சத்து ஆகியவற்றின் மீது உலகளாவிய கவனம் திரும்பியுள்ள நிலையில், சிறுதானியங்கள் இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய உத்திசார்ந்த கவனப் பகுதியாக உருவெடுத்து வருகின்றன. அறிவியல் ஆராய்ச்சி, தொழில்துறை இணைப்பு மற்றும் அடிமட்டத் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் CFTRI மாதிரியானது, இந்த வாய்ப்பை பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த விளைவுகளாக மாற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக நிலைநிறுத்தப்படுகிறது.
புகைப்படம் – மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (CFTRI) பயிற்சி பெறுபவர்களுக்கான 30 ஒற்றை அடுக்கு தங்கும் விடுதிக் கட்டிடத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
திவாஹர்
