புராஜெக்ட் 17A வகுப்பின் நான்காவது சக்திவாய்ந்த தளமான ஐஎன்எஸ் தரகிரி , 2026 ஏப்ரல் 03 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. நவீன கடற்படைக் கப்பல் கட்டுமானத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாக விளங்கும், சுமார் 6,670 டன் இடப்பெயர்ச்சி கொண்ட இந்த சமீபத்திய ஸ்டெல்த் போர்க்கப்பல், பல்துறை செயல்பாடுகளுக்காக போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) ஆதரவுடன் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. இது மேம்பட்ட ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரேடார் சிக்னலை கணிசமாகக் குறைத்து, சவாலான சூழல்களில் ஒரு அபாயகரமான அனுகூலத்தை வழங்குகிறது.
75%க்கும் மேற்பட்ட உள்நாட்டு உள்ளடக்கத்துடன், கணிசமாகக் குறைக்கப்பட்ட காலக்கெடுவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் தரகிரி, இந்தியாவின் கப்பல் கட்டும் திறனையும் வலுவான பொது-தனியார் ஒத்துழைப்பையும் பறைசாற்றுகிறது. பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில், ஐஎன்எஸ் தரகிரியை வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, அது இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறமை, தன்னிறைவு மற்றும் அசாத்தியமான கடற்படை சக்தியின் சின்னம் என்று விவரித்தார்.
“இந்தக் கப்பல் அதிவேகப் பயணம் செய்யும் திறன் கொண்டதுடன், நீண்ட காலத்திற்கு கடலில் நிலைநிறுத்தப்படவும் முடியும். எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தனது பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவைப்பட்டால் உடனடிப் பதிலடி கொடுக்கவும் வடிவமைக்கப்பட்ட அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. பிரம்மோஸ் மற்றும் தரை-வான் ஏவுகணைகள் போன்ற நவீன ரேடார், சோனார் மற்றும் ஏவுகணை அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன, இவை இதன் செயல்பாட்டுத் திறனை மேலும் அதிகரிக்கின்றன. கடுமையான போர் முதல் கடல்சார் பாதுகாப்பு, கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் மனிதாபிமானப் பணிகள் வரை, இது ஒவ்வொரு பணிக்கும் கச்சிதமாகப் பொருந்தி, ஒரு தனித்துவமான கடற்படைத் தளமாக விளங்குகிறது,” என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
11,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கடற்கரையைக் கொண்ட இந்தியா, மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது என்றும், கடலிலிருந்து தனித்து தனது வளர்ச்சியைப் பார்க்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். மேலும் அவர், நாட்டின் வர்த்தகத்தில் சுமார் 95 சதவீதம் கடல்வழிப் பாதைகள் மூலமாகவே நடைபெறுகிறது என்றும், எரிசக்திப் பாதுகாப்பு கடலையே சார்ந்துள்ளது என்றும், இதனால் வலிமையான மற்றும் திறமையான கடற்படையை உருவாக்குவது என்பது வெறும் ஒரு விருப்பத் தேர்வு மட்டுமல்ல, அது ஒரு முழுமையான அவசியம் என்றும் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், புத்தாக்கம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில், இளைஞர்களுக்கும் தொழில்துறைக்கும் ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். தற்போதைய நிச்சயமற்ற காலங்களில் தயாராக இருப்பதற்கு, பாதுகாப்பில் தற்சார்பை அடைவதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை என்று அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பு முயற்சிகள் தரை, கடல் மற்றும் வான்வெளிகளுக்குள் மட்டும் அடங்கிவிடாமல், விண்வெளி, இணையவெளி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கும் விரிவடைய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். அந்த தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலின்படியே, அரசாங்கம் பல முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது என்றும், அதன் முடிவுகள் தற்போது கண்கூடாகத் தெரிகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் மற்றும் பிற பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (டி.பி.எஸ்.யூ.க்கள்) ஆற்றிவரும் தொடர்ச்சியான நேர்மறையான பங்களிப்புகளைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். அவர் இந்த 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாப்புத் துறையில் தற்சார்பின் மையங்கள் என்று குறிப்பிட்டார். 2025-26 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதியை ரூ.38,424 கோடி என்ற வரலாறு காணாத உயரத்திற்குக் கொண்டு சென்றதில், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் முயற்சிகளைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். “13-14 ஆண்டுகளுக்கு முன்பு, நாம் ரூ.1,200 கோடி மதிப்புள்ள பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தோம். இன்று, அது கிட்டத்தட்ட ரூ.39,000 கோடியை எட்டியுள்ளது. இது இந்தியாவின் தற்சார்பு சீராக வளர்ந்து வருவதற்கும், நாம் சொந்தக் காலில் நிற்கிறோம் என்பதற்கும் சான்றாகும்,” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படைத் தலைமைத் தளபதி (சிஎன்எஸ்) அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, 1980-ல் பணியில் சேர்க்கப்பட்ட முன்னாள் லியாண்டர்-வகுப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் தரகிரியின் வளமான பாரம்பரியத்தை நினைவு கூர்ந்தார். இது இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் திறன்களையும் செயல்பாட்டுப் புத்தாக்கத்தையும் மேம்படுத்துவதில் ஒரு முன்னோடிப் பங்கை ஆற்றியது. மாறிவரும் கடல்சார் பாதுகாப்புச் சூழலைப் பற்றிப் பேசிய அவர், மாறும் புவிசார் அரசியல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மரபுசாரா அச்சுறுத்தல்களால் உருவாகும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அதிகரித்து வரும் சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். தேசிய கடல்சார் நலன்களை எந்நேரமும், எவ்விடத்திலும், எந்த வகையிலும் பாதுகாப்பதற்காக, கடற்படையானது போருக்குத் தயாரான, நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு சக்தியாகத் தொடர்ந்து விளங்கும் என்ற தனது உறுதிப்பாட்டை சிஎன்எஸ் வலியுறுத்தினார்.
இந்த மகத்தான நிகழ்வானது, கப்பலின் ஆணையிடும் கொடியை முறைப்படி உடைத்தல் மற்றும் கப்பலில் தேசியக் கொடியை முதன்முறையாக ஏற்றுதல் ஆகியவற்றுடன் குறிக்கப்பட்டது. பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான்; கிழக்கு கடற்படை கட்டளைத் தளத்தின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா; மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேப்டன் ஜக்மோகன் (ஓய்வு) ஆகியோர் இந்த ஆணையிடும் நிகழ்வின்போது உடனிருந்தவர்களில் அடங்குவர்.
ஐஎன்எஸ் தரகிரி பற்றி
இந்தப் போர்க்கப்பல், முந்தைய வடிவமைப்புகளைக் காட்டிலும் ஒரு தலைமுறைப் பாய்ச்சலைக் குறிக்கிறது. இது நேர்த்தியான வடிவத்தையும், கணிசமாகக் குறைக்கப்பட்ட ரேடார் குறுக்குவெட்டுப் பரப்பையும் கொண்டிருப்பதால், அபாயகரமான மறைவுத்தன்மையுடன் செயல்பட முடிகிறது. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன், இந்தக் கப்பல், தற்போது 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) உள்ளடக்கியுள்ள ஒரு உள்நாட்டுத் தொழில்துறைச் சூழலமைப்பின் முதிர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. இது அரசின் ஆத்மநிர்பர்தா முயற்சிக்குப் பங்களித்து, ஆயிரக்கணக்கான இந்திய வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கிறது.
அதன் நேர்த்தியான, மாடுலர் வெளிப்புறத் தோற்றத்திற்கு அடியில், ஒருங்கிணைந்த டீசல் அல்லது எரிவாயு உந்துவிசை இயந்திரத்தால் இயக்கப்பட்டு, அதிநவீன ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு ஆற்றல் மையம் அமைந்துள்ளது. இந்தத் தொழில்நுட்ப நுட்பம், கப்பலுக்கு ஒதுக்கப்படும் எந்தவொரு பணியையும் எங்கும், எந்த நேரத்திலும் நிறைவேற்றும் திறன் கொண்ட ஒரு பன்முகச் சொத்தாக அது நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது.
இந்தக் கப்பலின் போர்த் திறன் உலகத் தரம் வாய்ந்தது. இதில், அதிவேகத் தரை-தரை ஏவுகணைகள், நடுத்தரத் தரை-வான் ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட உள்நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புத் தொகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மாறிவரும் இந்தோ-பசிபிக் பாதுகாப்புச் சூழலில், இந்தக் கப்பல் பயன்பாட்டிற்கு வருவது ஒரு முக்கியமான புவிசார் அரசியல் சமிக்ஞையை அனுப்புகிறது: மகாசாகர் தொலைநோக்குப் பார்வையின் கீழ், சாத்தியமான எதிரிகளைத் தடுப்பதற்கும், கூட்டுப் பிராந்திய நிலைத்தன்மைக்கு பங்களிப்பதற்கும் நம்பகமான நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன் கொண்ட, சிக்கலான போர்க்கப்பல்களை உருவாக்கும் ஒரு முதன்மை நாடாக இந்தியா இப்போது திகழ்கிறது.
ஐஎன்எஸ் தரகிரி கிழக்குக் கடற்கரையில் கிழக்குக் கடற்படையில் இணையும் வேளையில், பல பத்தாண்டுகளாக தேசத்திற்கு சேவை செய்து வரும் ஒரு பெயரைக் கௌரவித்து, தனது முன்னோடியின் பெருமைமிக்க பாரம்பரியத்தை இக்கப்பல் முன்னெடுத்துச் செல்கிறது. இன்று கப்பலின் தளத்தில் வழங்கப்பட்ட செய்தி சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவானது: இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டு, இந்தியர்களால் கட்டப்பட்டு, இந்தியர்களால் இயக்கப்படும் கப்பல்களால்தான் இந்தியாவின் பெருங்கடல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
திவாஹர்
