தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அந்த தொகுதியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தேசியக் கட்சியாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாகவும் இருக்கும் பாஜகவில் வேட்பாளர்கள் தேர்வு இன்னும் இறுதியாகாத நிலையில் தஞ்சாவூர் தொகுதிக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்த முரளிதரனை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் மாநிலத் தலைவர்களை ஒரு கம்பெனியின் கிளை மேலாளர் போல தான் நடத்தி வருகிறது. தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத் தலைவர்களுக்கு இல்லாதக் காரணத்தால், எதற்கெடுத்தாலும் டெல்லிக்குத்தான் படையெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதோடு, கட்சிக்குள் பல கோஷ்டி மோதலும், குழப்பங்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இன்னும் வெளிப்படையாக சொல்லப் போனால் தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்களை அவர்கள் கட்சியில் உள்ளவர்களே மதிப்பதில்லை. இது அரசியலில் ஆரோக்கியமான செயல்பாடு அல்ல.
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமை இந்த விசயத்தில் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனைச் செய்து, மாநிலத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தங்கள் கட்சி விதிமுறைகளில் மாற்றங்களை போர்க் கால அடிப்படையில் செய்ய வேண்டும். அப்போதுதான் தேசிய கட்சிகள் மாநிலங்களில் வளர்ச்சியை எட்ட முடியும்.
அதேசமயம் மக்கள் மத்தியில் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கும் ஒரு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவர்களை மரியாதையாக நடத்துவார்கள்.
முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாதப் பதவிகளை “ரப்பர் ஸ்டாம்ப்” உத்தியோகமாகத்தான் மக்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள் என்பதை தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமை இப்போதாவது உணர வேண்டும்.
தேசியக் கட்சிகளின் தலைமை மாநிலத் தலைவர்களை கண்காணிக்க வேண்டுமே தவிர, அடிமைகளாக நடத்தக் கூடாது.
குறிப்பாக தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் வளர்ச்சி அடையாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
தனிப்பட்ட முறையில் தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள்தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்களே தவிர, கட்சி வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. அரசியலில் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.
நகர்ப்புறங்களில் ஒன்று இரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தன்னை துரத்திக் கொண்டு வரும் ஊடகவியலளர்களைச் சந்தித்து மைக் முன்பு வீர வசனம் பேசினால் மட்டும் போதாது. கிராமங்களை நோக்கி தங்களதுப் பார்வையை செலுத்த வேண்டும். மின் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, பொதுப் கழிப்பறை வசதி இல்லாத கிராமங்கள், இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மயான வசதி இல்லாமல் சாலையோரத்தில் எரியூட்டுவதும், புதைக்கும் அவலங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இறந்த சடலத்தைக் கொண்டு செல்வதற்கு பாலங்கள் கட்டப்படாததால் சடலங்களை தோளில் சுமந்து கொண்டு ஆறு மற்றும் கால்வாய்களை கடக்க வேண்டிய சூழலும் இன்னும் பல கிராமங்களில் இருக்கிறது. இன்னும் வெட்கத்தோடு சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறையும், கொத்தடிமை முறையும், சமத்துவம் இல்லாத நிலையும் தமிழ்நாட்டில் இன்னும் பல கிராமங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு, நேரில் பார்வையிட்டு, அறிக்கைகள் தயார் செய்து ஆதாரத்தோடு அரசுக்கும், தேசிய தலைமைக்கும் அனுப்ப வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அதுபோன்ற கிராமங்களுக்கு ஊடகவியாளர்களை வலுக்கட்டாயமாக நேரில் அழைத்துச் சென்று அந்த அவலங்களை பொதுவெளியில் அம்பலப்படுத்த வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்வதற்கு துணிச்சலும், மக்கள் நலனில் அக்கறையும், தியாக மனப்பான்மையும், அர்ப்பணிப்பும் அவசியம் வேண்டும்.
இந்த நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் கூட இதை செய்யவில்லை என்றால் வேறு எப்போதுதான் செய்வார்கள்? என்று தீரும் இந்த அவலம்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
