தமிழக அரசு புனித வெள்ளியன்று (03.04.2026) ஒருநாள் மதுக்கடைகளை மூட உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

கிறிஸ்தவ பெருமக்களின் புனித நாட்களில் ஒன்றாக புனித வெள்ளி கருதப்படுகிறது.

இயேசு கிறிஸ்து உலக மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக தியாகம் செய்து உயிரைக் கொடுத்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை முன்னிட்டு விரதம் இருப்பதும், தேவாலயங்களில் வழிபடுவதும் சிறப்புக்குரியது.

கிறிஸ்தவர்கள் அவர்களின் புனித தினமாக புனித வெள்ளியை அனுசரிக்கும் வேளையில் மதுக்கடைகளை திறந்திருப்பது அவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக அமையும்.

        குறிப்பாக கிறிஸ்தவர்களே புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

      மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று த.மா.கா(மூ) தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது.

         கடந்த ஆண்டின் புனித வெள்ளிக்கும் மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு த.மா.கா(மூ) கோரிக்கை வைத்தது.

        தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக் கடைகள் தான். ஆனாலும் தமிழக அரசு மதுக்கடைகளை மூடவில்லை. 

         மேலும் 2021 தேர்தல் காலத்தில் தி.மு.க அறிவித்த மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த சிறு நடவடிக்கையும் எடுக்காமல் மதுக்கடைகளை அதிகப்படுத்தி, மனமகிழ் மன்றங்கள் திறந்து வைத்து, மதுவை தாராளமயமாக்கி, குற்றங்கள் அதிகரிக்கச் செய்தது தான் தமிழக தி.மு.க ஆட்சியின் வேதனையான சாதனை.

        குறிப்பாக பள்ளி, கல்லூரி, கோயில், தேவாலயம் மற்றும் மசூதிக்கு செல்லும் வழியில் மதுக்கடைகள் இருப்பது மிகவும் கொடுமை.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (03.04.2026) அன்று புனித வெள்ளி வருவதால் அன்று ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை புனிதத்தோடு, பாதுகாப்பாக கொண்டாட வழி வகுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply