இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள், பீகார் மாநிலம் ராஜ்கிரில் இன்று (மார்ச் 31, 2026) நடைபெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துரைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இன்றைய பட்டமளிப்பு விழா ஒரு நாகரிக வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றார்: அறிவு நிலைத்திருக்கும், உரையாடல் மேலோங்கும், மற்றும் கற்றல் மனிதகுலத்திற்குத் தொடர்ந்து சேவை செய்யும் என்பதே அந்த வாக்குறுதி. பட்டம் பெறும் மாணவர்களை அவர் வாழ்த்தியதோடு, அவர்களின் சாதனைகள் விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் அறிவுசார் அர்ப்பணிப்பின் விளைவு என்றும் கூறினார். இன்று பட்டம் பெறும் மாணவர் குழுவில் பாதிக்கும் மேற்பட்டோர் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் என்பதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளாக ஒரு புகழ்பெற்ற கற்றல் மையமாகத் திகழ்ந்தது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நாளந்தாவின் வீழ்ச்சி இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மாபெரும் இழப்பாகும். இருப்பினும், நாளந்தாவின் கருத்தாக்கம் உயிர்ப்புடன் இருந்தது. நமது காலத்தில் அதன் மறுமலர்ச்சியானது, அந்தப் புகழ்பெற்ற பாரம்பரியத்தை ஒரு நவீன சூழலில் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான தேசிய மற்றும் சர்வதேச அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, தொடர்ச்சியான நிறுவன முயற்சிகள் மற்றும் கூட்டாளி நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலமே இந்த மறுமலர்ச்சி சாத்தியமாகியுள்ளது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பகிரப்பட்ட விழுமியங்களால் வழிநடத்தப்படும்போது, பல்வேறு நாடுகள் எவ்வாறு உயர்ந்த இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பண்டைய நாளந்தா பல்வேறு சித்தாந்தங்களை வரவேற்று, விவாதம் மற்றும் உரையாடல் கலாச்சாரத்தை வளர்த்தது என்று ஜனாதிபதி கூறினார். இங்கு, அறிவு ஒருபோதும் தனித்து பார்க்கப்படவில்லை; மாறாக, அது அறநெறி, சமூகம் மற்றும் மனிதகுலத்தின் பரந்த நலனுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த இலட்சியம் இன்றும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். உலகம் எண்ணற்ற சிக்கலான சவால்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில், கருணையில் வேரூன்றிய சுதந்திரமான மற்றும் விமர்சன சிந்தனையின் தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. நாளந்தா பல்கலைக்கழகம் ஆசியாவிலும் உலகெங்கிலும் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அது தனது கல்விச் சிறப்பால் மட்டுமல்லாமல், அதன் விழுமியங்களாலும் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும்.
பௌத்த தத்துவம் மற்றும் நடைமுறையுடன் இந்தியாவிற்கு ஆழமான, உயிரோட்டமான தொடர்பு உள்ளது என்று ஜனாதிபதி கூறினார். இந்தத் தொடர்பு, இந்தியாவின் செவ்வியல் அறிவு மரபுகளைப் பற்றிய முழுமையான புரிதலுடனும், தீவிரத்துடனும் பேணி வளர்க்கப்பட வேண்டும். பௌத்த ஆய்வு, ஆசியா முழுவதும் உள்ள அதன் பல்வேறு வெளிப்பாடுகளுடன் ஈடுபடும் அதே வேளையில், இந்தியாவின் நாகரிக அடித்தளங்களில் வேரூன்றியிருக்க வேண்டும். நாளந்தா பல்கலைக்கழகம் பௌத்த ஆய்வுகளுக்கான ஒரு முன்னணி உலகளாவிய மையமாக உருவெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தத் துறையில் உறுதியுடனும், ஆழத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும் முதலீடு செய்யுமாறு அவர் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தினார். அவ்வாறு செய்வதன் மூலம், நாளந்தா பல்கலைக்கழகம் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு பங்கை மீண்டும் நிறைவேற்றும் என்று அவர் கூறினார்.
பண்டைய நாளந்தா நூலகத்தில் லட்சக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அந்த உன்னதமான அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு , இன்று நாம் இங்கு கட்டியெழுப்பும் இந்த அமைப்பு ஒரு நீடித்த பாரம்பரியமாக விளங்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கும் பாதையில் பயணிக்கும் வேளையில், நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றும்.
திவாஹர்
