நீலகிரி வகுப்பின் (திட்டம் 17A) ஐந்தாவது கப்பலும் , கார்டன் ரீச் ஷிப்பிங் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE) நிறுவனத்தில் கட்டப்பட்ட இந்த வகுப்பின் இரண்டாவது கப்பலுமான துனகிரி ( யார்டு 3023), 2026 மார்ச் 30 அன்று கொல்கத்தாவில் உள்ள GRSE-யில் இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது. இது போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் தன்னிறைவு அடைவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. திட்டம் 17A போர்க்கப்பல்கள், கடல்சார் களத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட, பல்துறை மற்றும் பலதரப்பட்ட பணிகளைச் செய்யும் தளங்களாகும்.
துனகிரி என்பது, 05 மே 1977 முதல் 10 அக்டோபர் 2010 வரை இந்தியக் கடற்படையில் அங்கம் வகித்து, நாட்டிற்கு 33 ஆண்டுகள் பெருமைமிக்க சேவையாற்றிய, லியாண்டர் வகைப் போர்க்கப்பலான முந்தைய ஐ.என்.எஸ். துனகிரியின் மறுபிறவியாகும். இந்த அதிநவீனப் போர்க்கப்பல், கடற்படை வடிவமைப்பு, மறைந்திருந்து தாக்கும் திறன், தாக்குதல் ஆற்றல், தானியக்கம் மற்றும் தாக்குப்பிடிக்கும் திறன் ஆகியவற்றில் ஒரு பெரும் பாய்ச்சலைப் பிரதிபலிப்பதோடு,போர்க்கப்பல் கட்டுமானத்தில் தன்னிறைவின் போற்றத்தக்க சின்னமாகவும் திகழ்கிறது.
போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் (WDB) வடிவமைக்கப்பட்டு, போர்க்கப்பல் மேற்பார்வைக் குழுவின் (கொல்கத்தா) மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட P17A ரகப் போர்க்கப்பல்கள், உள்நாட்டு கப்பல் வடிவமைப்பு, மறைந்திருந்து தாக்கும் திறன், தாக்குப்பிடிக்கும் ஆற்றல் மற்றும் போர்த் திறன் ஆகியவற்றில் ஒரு தலைமுறைப் பாய்ச்சலைப் பிரதிபலிக்கின்றன. ஒருங்கிணைந்த கட்டுமானம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இக்கப்பல் திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
பி17 (ஷிவாலிக்) வகைக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில், பி17ஏ கப்பல்களில் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உணர்விகள் பொருத்தப்பட்டுள்ளன . இந்தக் கப்பல்கள் , ஒவ்வொரு தண்டு மீதும் ஒரு கட்டுப்படுத்தக்கூடிய சுழல்வேக சுழலியை (CPP) இயக்கும் ஒரு டீசல் இயந்திரம் மற்றும் ஒரு வாயு விசையாழியைக் கொண்ட ஒருங்கிணைந்த டீசல் அல்லது வாயு (CODOG) உந்துவிசை அமைப்புகளுடனும் , அதிநவீன ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்புடனும் (IPMS) கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் உணர்விகள் தொகுப்பில் பிரம்மோஸ் எஸ்எஸ்எம், எம்எஃப்ஸ்டார் மற்றும் எம்ஆர்எஸ்ஏஎம் தொகுப்பு, 76மிமீ எஸ்ஆர்ஜிஎம், மற்றும் 30மிமீ மற்றும் 12.7மிமீ நெருங்கிய தாக்குதல் ஆயுத அமைப்புகளின் கலவை ஆகியவை அடங்கும். இவற்றுடன், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போருக்கான ராக்கெட்டுகள் மற்றும் டார்பிடோக்களும் இதில் உள்ளன.
கடந்த 16 மாதங்களில் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்படும் ஐந்தாவது பி17ஏ கப்பல் துனகிரி ஆகும். முதல் நான்கு பி17ஏ கப்பல்களின் கட்டுமானத்தில் பெற்ற அனுபவங்கள், இவ்வகையில் முதலாவதான நீலகிரி கப்பலின் கட்டுமானக் காலத்தை 93 மாதங்களுடன் ஒப்பிடுகையில், துனகிரியின் கட்டுமானக் காலத்தை 80 மாதங்களாகக் குறைக்க உதவியுள்ளன .
துனகிரியின் ஒப்படைப்பு , தேசத்தின் வடிவமைப்பு, கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் ஆற்றலை வெளிக்காட்டுவதோடு, கப்பல் வடிவமைப்பு மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகிய இரண்டிலும் தற்சார்பு மீது கடற்படை கொண்டுள்ள தளராத கவனத்தையும் பிரதிபலிக்கிறது.
75% உள்நாட்டுமயமாக்கல் உள்ளடக்கத்துடன், இந்தத் திட்டம் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஈடுபடுத்தியுள்ளதுடன், சுமார் 4,000 பணியாளர்களுக்கு நேரடியாகவும், 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுத்துள்ளது.
திவாஹர்
