பிரதமர் மார்ச் 31 அன்று குஜராத் செல்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 2026 மார்ச் 31 அன்று குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வார். காலை சுமார் 10 மணியளவில், காந்திநகரில் உள்ள சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைப்பார். மேலும், அவர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுவார். பிற்பகல் சுமார் 12:45 மணியளவில், அகமதாபாத், சனந்தில் உள்ள கெய்ன்ஸ் செமிகான் ஆலையை பிரதமர் திறந்து வைப்பதுடன், பொது மக்கள் கூட்டத்திலும் உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து, பிரதமர் வாவ்-தரத் நகருக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு, மாலை சுமார் 4 மணியளவில், ₹20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவற்றைத் திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மேலும், அவர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுவார்.

காந்திநகரில் பிரதமர்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காந்திநகரில் உள்ள கோபா தீர்த்தத்தில் சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைப்பார். அசோகரின் பேரனும், அகிம்சை மற்றும் சமண மதப் பரவலில் தனது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட சமண மரபில் போற்றப்படும் நபருமான சாம்ராட் சம்பிரதியின் பெயரால் அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், சமண மதத்தின் வளமான வரலாற்று, கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகிறது.

மகாவீர் ஜெயின் ஆராதனை கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் நாகரிக மரபுகளின் தனித்துவமான அம்சங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏழு தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு பல நூற்றாண்டுகளின் அறிவு மற்றும் பாரம்பரியத்தின் வழியான ஒரு விரிவான பயணத்தை வழங்குகிறது. இந்த அருங்காட்சியகம், பாரம்பரியக் கண்காட்சிகளை நவீன டிஜிட்டல் மற்றும் ஒலி-ஒளிக் காட்சிகளுடன் ஒருங்கிணைத்து, பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களுக்கு ஒரு ஆழ்ந்த மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை உருவாக்குகிறது.

Leave a Reply