கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட , எட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஆழமற்ற நீர்க் கப்பல்களில் (ASW SWC) நான்காவதான ‘அக்ரே’ , 2026 மார்ச் 30 அன்று கொல்கத்தாவில் இந்தியக் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது .
உள்நாட்டுப் பாதுகாப்பு கப்பல் கட்டுமானத்தின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்கள் (ASW SwCs), கொல்கத்தாவில் உள்ள GRSE நிறுவனத்தால், இந்திய கப்பல் பதிவேட்டின் (IRS) வகைப்பாட்டு விதிகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.
சுமார் 77 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல்கள் , வாட்டர்ஜெட் மூலம் இயக்கப்படும் மிகப்பெரிய இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல்கள் ஆகும். மேலும், இவை அதிநவீன இலகுரக டார்பிடோக்கள், உள்நாட்டு ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் ஆழமற்ற நீர் சோனார் ஆகியவற்றைக் கொண்டுள்ளன . இவை நீருக்கடியில் உள்ள அச்சுறுத்தல்களைத் திறம்படக் கண்டறிந்து தாக்குவதற்கு உதவுகின்றன. இந்தக் கப்பலின் சேர்க்கையானது, இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கண்ணிவெடிப் போர் திறன்களையும், கடலோரக் கண்காணிப்பையும் மேலும் வலுப்படுத்தும்.
இந்தக் கப்பல், 2017-ல் சேவையிலிருந்து விலக்கப்பட்ட, 1241 PE வகுப்பு ரோந்துக் கப்பல்களில் நான்காவதான, முந்தைய ஐ.என்.எஸ். அக்ரேயின் மறுபிறவியாகும். இதன்மூலம், புகழ்பெற்ற பாரம்பரியப் பெயர்களை நிலைநிறுத்தும் கடற்படை மரபு தொடர்கிறது.
80%க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் , ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தை முன்னெடுக்கும் இந்திய கடற்படையின் முயற்சியில் அக்ரே கப்பலின் ஒப்படைப்பு மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது . உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி சூழலமைப்பின் வளர்ந்து வரும் வலிமைக்கும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் இக்கப்பல் ஒரு சான்றாகத் திகழ்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா
