இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், புது தில்லியில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘நீதிக்கான முழுமையான அணுகலுக்கான புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்’ (DISHA) திட்டத்தின் கீழ் உள்ள ‘தொலைபேசி வழிச் சட்டம்’ முன்னெடுப்பு குறித்த 2026 தேசிய கலந்தாய்வில் இன்று உரையாற்றினார். மேலும், அனைத்துக் குடிமக்களுக்கும் எளிதில் அணுகக்கூடிய, கட்டுப்படியான விலையில் மற்றும் உரிய நேரத்தில் நீதி கிடைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நீதி கிடைப்பது ஜனநாயகத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்திய அவர், நீதி என்பது ஒரு சிலருக்கான சலுகையாக இல்லாமல், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய உரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டு உறுதிப்பாட்டை இந்த தேசிய கலந்தாய்வு பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
சமீபத்திய சட்ட சீர்திருத்தங்களை எடுத்துரைத்த துணை ஜனாதிபதி, புதிய குற்றவியல் சட்டங்களுக்கான இந்த மாற்றம், நடைமுறைகளை எளிமையாக்கி செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம், குடிமக்களை மையமாகக் கொண்ட நீதி அமைப்பை நோக்கிய ஒரு வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார்.
நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மற்றும் தொலைமருத்துவம் போன்ற முன்னெடுப்புகளை மேற்கோள் காட்டி, ஆளுகையில் தொழில்நுட்பத்தின் மாற்றியமைக்கும் பங்கை அவர் வலியுறுத்தினார். மேலும், சட்டச் சேவைகளை ஜனநாயகமயமாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகத் தொலை-சட்ட முன்னெடுப்பை அவர் விவரித்தார். வழக்குத் தொடர்வதற்கு முந்தைய சட்ட ஆலோசனையானது, தகராறுகளை முன்கூட்டியே தீர்க்கவும், தேவையற்ற வழக்குகளைக் குறைக்கவும், நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
மொழிசார் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய துணை குடியரசுத் தலைவர், இந்திய அரசியலமைப்பைப் பல பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்துரைத்ததோடு, புரிதலையும் பங்கேற்பையும் மேம்படுத்தும் வகையில் சட்ட ஆலோசனைகளை உள்ளூர் மொழிகளில் வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
முக்கிய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டிய அவர், அனைவரையும் உள்ளடக்குதல், தரம், பொறுப்புக்கூறல் மற்றும் நோக்கத்துடன் கூடிய புதுமை ஆகியவற்றை வலியுறுத்தினார். குறிப்பாகப் பெண்கள், கிராமப்புற மற்றும் விளிம்புநிலை சமூகத்தினருக்கு, சட்ட சேவைகள் கடைநிலை வரை சென்றடைவதை உறுதிசெய்ய, ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
நீதி கிடைப்பதை விரிவுபடுத்துவதில் அடிமட்ட அளவில் பங்களித்த துணைச் சட்டத் தன்னார்வலர்கள், பொது சேவை மையங்கள், குழு வழக்கறிஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்களைத் துணை ஜனாதிபதி பாராட்டினார்.
மேலும், பதிலளிக்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான ஒரு சட்டச் சூழலைக் கட்டமைப்பதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தையும் அதன் கூட்டாளர் அமைப்புகளையும் அவர் பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது, சட்ட விழிப்புணர்வு, மக்களைச் சென்றடைதல் மற்றும் சேவை வழங்குதலை மேம்படுத்தும் நோக்கில், துணை ஜனாதிபதி பல அறிவுசார் தயாரிப்புகளையும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கங்களையும் வெளியிட்டார்.
தொலை-சட்ட சேவைகள் மூலம் தங்கள் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களின் நெகிழ்ச்சியான கதைகளை உள்ளடக்கிய “பயனாளிகளின் குரல்” கையேடு 2025–26-ஐ அவர் வெளியிட்டார்.
மேலும் அவர், குடிமக்களுக்கும் சட்ட சேவைகளுக்கும் இடையே ஒரு டிஜிட்டல் பாலமாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் உரையாடல் தொழில்நுட்பமான ‘நியாய சேது’வையும் அறிமுகப்படுத்தினார்.
குறிப்பாக கிராமப்புற மற்றும் டிஜிட்டல் வசதி குறைவாக உள்ள மக்களிடையே பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தும் நோக்கில், நீதி வழங்குதலின் எளிதில் தொடர்புபடுத்தக்கூடிய மற்றும் அணுகக்கூடிய சின்னமாக வடிவமைக்கப்பட்ட நியாய சேது சின்னத்தையும் துணை ஜனாதிபதி அறிமுகப்படுத்தினார்.
டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட சட்ட விழிப்புணர்வு சித்திரக்கதைகளின் தொடரும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சரும் (பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சருமான திரு அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களும், பிற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
திவாஹர்
