இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு நிலக்கரி வாயுவாக்கம் முக்கியமானது: மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, இன்று பாரத் மின்சார உச்சி மாநாடு 2026-ல் உரையாற்றுகையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதிலும், தொழில்துறை வளர்ச்சியை ஆதரிப்பதிலும் நிலக்கரி வாயுவாக்கம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எடுத்துரைத்தார்.

தொழில்துறைத் தலைவர்கள், வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் பொருளாதாரத்திற்கு, வளர்ச்சியை நிலைத்தன்மையுடன் இணைக்கும் ஒரு சமச்சீரான எரிசக்தி அணுகுமுறை தேவை என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், உற்பத்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் நாடு வலுவான வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வலுவான நிலக்கரி இருப்பை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். உலகிலேயே மிகப்பெரிய இருப்புகளில் ஒன்றான இதன் இருப்பு, ஏறத்தாழ 400 பில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மொத்த எரிசக்தி கலவையில் நிலக்கரி சுமார் 55% பங்களிக்கிறது மற்றும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 74% ஆகும். தற்போது ஆண்டு நிலக்கரித் தேவை சுமார் ஒரு பில்லியன் டன்களாக உள்ள நிலையில், 2047-ஆம் ஆண்டுக்குள் இது கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நிலக்கரியின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அதே வேளையில், 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் தனது இலக்கில் இந்தியா உறுதியாக உள்ளது.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply