இந்தியத் துணை குடியரசுத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று புனே உருளி காஞ்சனில் நடைபெற்ற நிசர்கோபாச்சார் ஆசிரமத்தின் 81வது நிறுவன நாள் விழாவில் உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய துணை ஜனாதிபதி, ஆசிரமத்தை கருத்தாக்கம் செய்த மகாத்மா காந்தியும், இந்த உன்னத நோக்கத்திற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கிய விவசாயியும் தேசத்தின் நன்றிக்கு உரியவர்கள் என்று குறிப்பிட்டார். அவர் ஆசிரமத்தை வெறும் ஒரு நிறுவனம் மட்டுமல்ல, அது இயற்கையோடு இயைந்து எளிமையாகவும் ஒழுக்கமாகவும் வாழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையால் உத்வேகம் பெற்ற ஒரு இயக்கம், ஒரு தத்துவம் மற்றும் ஒரு வாழ்க்கை முறை என்று விவரித்தார்.
இயற்கையே மிகச்சிறந்த குணப்படுத்துபவர் என்று காந்திஜி நம்பியதாகவும், உண்மையான ஆரோக்கியம் என்பது எளிமை, ஒழுக்கம் மற்றும் இயற்கையோடு இயைந்து வாழ்வதில்தான் அடங்கியுள்ளது என்றும் துணை ஜனாதிபதி கூறினார்.
வாழ்க்கை முறை நோய்களின் அதிகரித்து வரும் சுமையைச் சுட்டிக்காட்டி, ஆசிரமத்தின் செய்தி முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று துணைத் தலைவர் கூறினார். ஆரோக்கியம் என்பது வெறுமனே நோய் இல்லாத நிலை மட்டுமல்ல, அது முழுமையான உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் ஒரு நிலை என்று அவர் வலியுறுத்தினார். சமச்சீரான ஊட்டச்சத்து, வழக்கமான உடற்பயிற்சி, மன அமைதி மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவின் ஆளுநராக இருந்த தனது பதவிக் காலத்தை நினைவு கூர்ந்த துணை குடியரசுத் தலைவர், பழங்குடி சமூகங்களிடையே நிலவும் செழுமையான பாரம்பரிய மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை உன்னிப்பாகக் கவனிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். இயற்கையிலும் பாரம்பரிய அறிவிலும் வேரூன்றிய, காலத்தால் சோதிக்கப்பட்ட இந்தப் பழக்கவழக்கங்கள், முழுமையான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியாவின் ஆழ்ந்த நாகரிக ஞானத்தைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் புத்துயிர் பெற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்றும், ஆயுஷ் நிறுவனங்கள் தடுப்பு மற்றும் முழுமையான சுகாதாரப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, நாட்டில் மருத்துவ மற்றும் ஆரோக்கியச் சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன என்றும் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார். யோகாவும் இயற்கை மருத்துவமும் நவீன மருத்துவத்திற்கு மாற்றானவை அல்ல, மாறாக சக்திவாய்ந்த துணைக்கருவிகள் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் பாரம்பரிய ஆரோக்கிய முறைகளை உலகிற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசுகள் என்றும் அவர் விவரித்தார்.
இன்றைய வேகமான உலகில், மக்கள் பெரும்பாலும் பொருள்சார் வெற்றியில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள், ஆனால் வாழ்க்கையில் அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தில்தான் உண்மையான மனநிறைவு கிடைக்கிறது என்று துணை ஜனாதிபதி கூறினார். தனிநபர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது குடும்பங்கள் வலுப்பெறுகின்றன; குடும்பங்கள் வலுவாக இருக்கும்போது சமூகம் செழிக்கிறது; சமூகம் செழிக்கும்போது தேசம் உயர்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
திவாஹர்
