நியூஸ் 24×7 தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீதும், அவரது சகோதரர்கள் மற்றும் 20 நபர்கள் மீதும் குளித்தலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் வீடியோ கேமரா மற்றும் டிரோன் கேமரா உள்பட ரூ.22 லட்சம் மதிப்புள்ள ஒளிப்பதிவு மற்றும் ஒளிபரப்புச் சாதனங்களை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் T. கருணாகரன் பதிவுச் செய்த முதல் தகவல் (FIR No:70/2026) அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடி உண்மையானத் தகவல்களை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவுச் செய்துள்ளோம்.
05.02.2026 ஆம் தேதி 12 மணிக்கு, குளித்தலை காவல் ஆய்வாளர் T. கருணாகரன் ஆகிய நான் 30.01.2026 ஆம் தேதி நிலையை அலுவலில் இருந்தபோது திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இளையான் மகன் கதிரவன் வயது 45 என்பவர் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரைப் பெற்று குளித்தலை நிலைய மனு எண்: 54/2026 ஐ வழங்கி விசாரணைக்குப் பின் வழக்குப்பதிவு செய்த விவரம் பின்வருமாறு,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் News 24×7 ன் திருச்சி மாவட்ட நிருபராகப் பணியாற்றி வருகிறேன். எங்களுக்கு சொந்த தகவலின் பேரிலும், சமூக ஆர்வலர்கள் சொன்னதின் பேரிலும், அய்யர்மலை அருகே சட்டத்திற்கு விரோதமான முறையில் குவாரி செயல்பட்டு வருவதாக அதனை சேகரிப்பதின் பொருட்டு எனது மாவட்ட செய்தியாளர்கள், மேலாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தும் மற்றும் கரூர் மாவட்ட எனது செய்தியாளர்களுக்கும், மேலாளருக்கும் தகவல் தெரிவித்து விட்டு மேற்படி கனிம வள கொள்ளை சம்பந்தமாக செய்தி சேகரிப்பதற்காக குளித்தலை அய்யர்மலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் தாண்டி மதியம் 1:30 மணியளவில் டிரோன் கேமரா வைத்து செய்தி சேகரிக்க தயாராகிக் கொண்டிருந்தோம். ஆனால், சுமார் 1/2 மணி நேரமாக சரியான முறையில் டிரோன் கேமரா மூலமாக செய்தி சேகரிக்க முடியவில்லை. அது மேற்படி டிரோன் கேமரா மற்றும் எங்களுடைய Live தொடர்புக்கும் எந்த ஒரு தொடர்பும் சிக்னலும் கிடைக்கப்பெறவில்லை. அதனை சரி செய்து கொண்டிருந்தோம். நாங்கள் இருந்த அய்யர்மலை தாண்டி மணப்பாறை ரோட்டில் உள்ள சுப்பிரமணியனுடைய HP petrol bunk ல் நின்று கொண்டிருந்த என்னை மற்றும் என்னுடன் வந்த Camera man செபஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர்கள் 2 பேரையும் சேர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது மகன் அவரது சகோதரர்கள் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத சுமார் 20 நபர்கள் எங்களை எட்டி உதைத்து கீழே தள்ளி நெஞ்சில் மிதித்தும் பு***** மகனுங்களா எம் எல் ஏ எனக்கு சொந்தமான இடத்திலேயே வந்து பிரச்சனை பண்றீங்களா என்றும், தான் வைத்திருந்த Sony 4K video camera மற்றும் Live V bag kit இதை வைத்து தானே நீங்க காட்டிக் கொடுக்குறீங்க என்று மேற்படி எங்கள் உபயோக பொருட்களான Sony 4K video camera மற்றும் Live V bag kit சுமார் 1500000 (பதினைந்து லட்சம்) மதிப்பு மற்றும் ட்ரோன் 700000 மதிப்புள்ள ட்ரோன் கேமராவை அடித்து நொறுக்கிவிட்டார். சேதப்படுத்திவிட்டு மேற்படி பழனியாண்டி எம்எல்ஏ மற்றும் அவரது மகன் இனி எப்படி செய்தி சேகரிப்பீர்கள் என்றும், இனிமேல் இந்த பக்கம் வந்தால் உங்கள் இரண்டு பேரையும் கொன்று புதைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். எனவே சமூகம் அய்யா அவர்கள் எங்களை அடித்தும் மற்றும் எங்கள் தொழில் சாதனப் பொருட்கள் ரூபாய் 22 இருபத்து இரண்டு லட்சம் சேதப்படுத்தியும் எங்களைக் கொன்று விடுவேன் என்று மிரட்டிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகம் அய்யா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு E.கதிரவன்
நாள்: 30.01.2026
30.01.2026 கொடுத்த புகார் மனு மீது 05.02.2026 அன்று 12 மணிக்கு குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் T.கருணாகரன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது மகன் அவரது சகோதரர்கள் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 20 நபர்கள் மீது கீழ்காணும் 5 பிரிவுகளில் U/S 191(2), 296(b), 115(2), 324 (4), 351(2) BNS ன் படி வழக்குப் பதிவு (Crime No : 70/20226) செய்துள்ளார்.
முக்கியக் குறிப்பு: மேற்படி முதல் தகவல் அறிக்கையில் வழக்கமானச் செய்தி நடையோ, வர்ணனையோ இல்லை எனறு யாரும் வருத்தப்பட வேண்டாம். மேலும், ஏதாவது எழுத்துப் பிழை இருந்தாலும் அது நமது தவறல்ல! FIR என்பது ஒரு புகார்தாரரின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம், அது ஒரு Basic legal document அதில் திருத்தம் செய்வதற்கோ, வார்த்தைகளை மாற்றி அமைப்பதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் உள்ளது உள்ளபடி அப்படியே நாம் பதிவுச் செய்துள்ளோம்.
–கே .பி .சுகுமார் மற்றும் UTL MEDIA TEAM.
