போகிப் பண்டிகையை புகையில்லா பசுமை விழாவாகக் கொண்டாட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த போகிப் பண்டிகையைப் புகையில்லா பசுமை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லிநாயனப்பள்ளியில் அமைந்துள்ள M.T.V. உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் க. வெங்கடேசன், M.T.V. உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்பட வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மண்ணையும், நிலத்தடி நீரையும் மாசுப்படாமல் பாதுகாப்பது குறித்தும், போகிப் பண்டிகையின் தவறானப் புரிதலால் பழைய பொருள்களையும், குப்பைகளையும், பிளாஸ்டிக் போன்ற நச்சுக் கழிவுகளையும் நாம் எரிப்பதால் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் ஏற்படும் தீங்குகள் குறித்தும், மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அதற்காக வடிவமைக்கப்பட்ட தினசரி காலண்டரும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதுபோன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கம்பெனி மற்றும் நிறுவனங்களில் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply