தமிழக அரசு சேலம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தால் மக்கள் பயனடைய வேண்டுமே தவிர பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் டால்மியா போர்ட் அருகே 880 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதாக வெளியிட்ட தமிழக அரசின் அறிவிப்பு மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்றாலும் சாயப்பட்டறைகள் அமைக்கப்படும் என்ற தகவலானது பெரிதும் வேதனையானது.
தமிழக அரசு சேலம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் சாயப்பட்டறைகள் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் வேளையில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதாவது சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜவுளிப் பூங்காவில் சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் இயற்கை வளங்களை அழிக்கும் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி சுற்றுவட்டார விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரணம் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
சாயப்பட்டறைகளின் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்து சேலம் மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போகும். மேலும் இந்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 4,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். சாயப்பட்டறைகள் அமைத்தால் அப்பகுதி நீர்நிலைகள் மாசடைந்து, நஞ்சாக மாறி விளைநிலங்கள் அழியும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொது மக்களின் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.
சாயப்பட்டறைகள் அமையும் போது 15 கிலோ மீட்டர் சுற்றளவில் நிலம், நீர், காற்று, விவசாய நிலங்கள் மாசடைந்து, அழிந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
குறிப்பாக மக்கள் குடியிருப்பு நிறைந்த மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக ஜாகீர் அம்மாபாளையம் இருப்பதால் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட்டு மாற்றுத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே தமிழக அரசு சேலம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தில் நிலத்தடி நீருக்கும், விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சாயப்பட்டறைகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
