பாமக சட்ட குழுவின் முயற்சியால் வெளிச்சத்திற்கு வந்த முந்திரி ஆலை தொழிலாளி கொலையும்! -கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்க்கு, சி.பி.சி.ஐ.டி போலிசார் விரித்துள்ள வலையும்?!

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்(File Photos)

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த ஆலை திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமானது ஆகும்.

தினமும் காலை 8 மணிக்கு பணிக்குச் சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் கோவிந்தராசு, சம்பவத்தன்று வீடு திரும்பவில்லை. அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், 20.09.2021 அதிகாலை 2.30 மணிக்கு, சென்னையில் பணியாற்றும் அவரது மகன் செந்தில் வேல் என்பவரை, கோவிந்தராசுவின் செல்பேசியிலிருந்து தொடர்பு கொண்ட கடலூர் மக்களவை உறுப்பினர் இரமேஷின் உதவியாளர் நடராஜன், ‘‘உனது தந்தை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அடித்து கொல்லப்பட்ட கோவிந்தராசு.

அதைத் தொடர்ந்து கோவிந்தராசுவின் குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, அவரது முகம் உள்ளிட்ட உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் இருந்தன.

திடமான மனநிலை கொண்ட கோவிந்தராசு தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகளோ, தற்கொலை செய்து கொண்டவரின் உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளோ இல்லை. அந்தக் காயங்கள் மற்றும் இரத்தக்கரைகள் அனைத்தும் அவர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதால் ஏற்பட்டவை என்றே கூறப்படுகிறது.

கோவிந்தராசு தற்கொலை செய்யும் நோக்குடன் நஞ்சு குடித்திருந்தால் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலை நிர்வாகம் உடனே தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், இரவு 8 மணிக்கு பணி முடித்து திரும்ப வேண்டிய கோவிந்தராசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, அடுத்த நாள் அதிகாலையில் தான் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளனர். அப்படியானால் இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன?!

இந்த கேள்விகளுக்கு விடை தேடி பாமக சட்ட குழு, உடனே சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.

அவற்றின் விளைவாக, சென்னை உயர்நீதிமன்றம் கீழ்காணும் உத்தரவை பிறப்பித்தது.

கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை புதுவை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டும்.

உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும், மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்.

நடந்தது கொலை தான் என்பதற்கான குறிப்புகள் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என பதிவு செய்திருப்பது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தான் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாறியது. கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷின் உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த நிமிடம் வரை கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் கைது செய்யப்படவில்லை.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள, கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொடூரமான முறையில் அடித்து, கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட வழக்கில், டி.ஆர்.வி.எஸ்.ரமேஷின் உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவிந்தராசு கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் விசாரணை இதுவரை ஐயத்திற்கு இடமின்றி சென்று கொண்டிருக்கிறது. வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், இந்த வழக்கின் முதன்மை எதிரியான (ஏ1) கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்? என்பது தான் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. அவர் கைது செய்யப்படுவதில் செய்யப்படும் தாமதம் இவ்வழக்கின் விசாரணையை பாதிக்கும்.

கோவிந்தராசு கொலை தொடர்பாக கடந்த மாதம் 20 ஆம் தேதி கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த இரு நாட்களில் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அப்போதிலிருந்து அவர் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் தான் வைக்கப்பட்டிருந்திருப்பார். அதனால் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அத்தகைய சூழலில் கொலை வழக்கின் முதன்மை எதிரியான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. முதன்மை எதிரியை கைது செய்யாமல் அவரது உதவியாளர்களை மட்டும் கைது செய்வதால் பயனில்லை.

கடலூர் எம்.பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் செய்த குற்றங்கள் என்னென்ன? என்பதை அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரிவுகளே காட்டுகின்றன.

தொழிலாளி கோவிந்தராசுவை கடத்திச் சென்று அடைத்து வைத்தல் (இ.த.ச. 341), கொலை (இ.த.ச. 302), வன்முறையை பிரயோகித்தல் (இ.த.ச. 147), குற்றம் செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடுதல் (இ.த.ச. 149) ஆகியவற்றுடன் கூட்டுச்சதி (இ.த.ச. 120 பி), சாட்சியங்களை அழித்தல் (இ.த.ச. 201) ஆகிய பிரிவுகளில் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிந்தராசு கொல்லப்பட்ட பிறகு அவர் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக குற்றஞ்சாட்டப்படும் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், இனியும் கைது செய்யப்படாமல் இருந்தால் வழக்கின் சாட்சியங்களை அழித்து விடுவார்.

எனவே, இனியும் தாமதிக்காமல் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை சி.பி.சி.ஐ.டி உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில் எந்தவிதமான அரசியல் அழுத்தமும்; அரசியல் தலையீடும் மற்றும் குறிக்கீடும் இல்லை என்பதை நிரூப்பிக்கும் தருணம், சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்கு விடிவதற்குள் நிச்சயம் விடை கிடைக்கும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply