பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம், நித்தி ஆயோக், வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள், இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம், இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம், இந்திய பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட இதர தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொண்ட பிறகு அறிவியல் ரீதியான முறையில் சரிபார்க்கப்பட்டு, துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான திட்டம் முடிவு செய்யப்பட்டதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.
அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை, வாகன உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சோதனை முகமைகள், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இதுகுறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளுடன் கள சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, வாகனங்களின் ஆயுட்காலம், இயங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் 20 சதவீத எத்தனாலுடன் கூடிய பெட்ரோல், பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் பாதுகாப்பானது என்று அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இந்த எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தும் பழைய வாகனங்களின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றமோ அல்லது அசாதாரணமாக தேய்மானமோ ஏற்படவில்லை என்பதையும் இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.
15 சதவீத எத்தனால் கலப்புடன் கூடிய பெட்ரோல் பயன்பாடு, மூன்றரை ஆண்டுகளாகவும், 19, 20 சதவீத எத்தனால் கலப்புடன் கூடிய எரிபொருள் பயன்பாடு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகவும் பயன்பாட்டில் உள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள், 3 கோடிக்கும் அதிகமான பெட்ரோல் கார்கள் இந்த எரிபொருள் கலவையைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வருவதாக அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா
