வளரும் புத்தாக்க சிந்தனையாளர்களை நாட்டின் முறையான புத்தாக்கச் சூழலுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு முன்னிலையில் வளரும் புதுமைக் கண்டுபிடிப்பாளர் அங்கீகார விழா நடைபெற்றது.
இதில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியானது ஆய்வகங்களிலும், பெருநகரங்களிலும் இருந்து மட்டுமல்லாமல், கிராமங்கள், சிறு நகரங்கள், சமூகப் புத்தாக்க சிந்தனையாளர்களிடமிருந்து உருவாகும் என்று கூறினார். தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் அடிப்படை நிலை புத்தாக்கங்களே திறவுகோல் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவுக்கான அணுகல் ஆகியவற்றை ஜனநாயகப்படுத்துவதன் மூலம், புதுமைக் கண்டுபிடிப்பை ஒரு நாடு தழுவிய இயக்கமாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார். அடல் புத்தாக்க இயக்கம், புத்தாக்கச் சூழலமைப்பை சிறப்பாக மாற்றியமைத்துள்ளது என்று அவர் கூறினார்.
இதில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட், நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி, மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்
