சிறை செல்லும் செந்தில் பாலாஜி!

திமுக தலைமைக்கு வலதுக்கரமாக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் (Managing Director) எஸ். விசாக்கன் ஐஏஎஸ் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. முதல் தகவல் (FIR No 05/2026) அறிக்கையின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளோம்.

05-2026-SIC

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமங்கள் வழங்குதல், மதுபானப் போக்குவரத்துக்கான டெண்டர்கள் மற்றும் மதுபான ஆலைகளின் கொள்முதல் முறைகேடுகள் எனப் பல்வேறு வழிகளில் பெருமளவில் அதிகார துஷ்பிரயோகமும் நிதி முறைகேடுகளும் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை (Enforcement Directorate -ED) தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இதற்கான போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்களைக் குறிப்பிட்ட ஒரு சில சிண்டிகேட்களுக்கு மட்டும் சாதகமாக முடிப்பது, உரிமம் புதுப்பிக்கப்படாதப் பார்களை சட்டவிரோதமாகச் செயல்பட விட்டு அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்துவது மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் MRP விலையை விட ₹10 முதல் ₹500 வரை கூடுதலாக வசூலித்து ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கையாடல் செய்தது போன்ற முக்கிய குற்றச்சாட்டுகள் இதில் அடங்கியுள்ளன.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக (A-1) சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் முன்னாள் MD விசாக்கன் இரண்டாவது குற்றவாளியாகவும் (A-2), முன்னாள் மண்டல மேலாளர்கள் இராம துரை முருகன் மூன்றாவது குற்றவாளியாகவும் (A-3), பன்னீர் செல்வம் நான்காவது குற்றவாளியாகவும் (A-4), முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேர்முக உதவியாளர் பாஸ்கர் ஐந்தாவது குற்றவாளியாகவும் (A-5) மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளிகளான ரதேஷ் ராஜ் சண்முகவேல் ஆறாவது குற்றவாளியாகவும் (A-6), கார்த்திக் ஏழாவது குற்றவாளியாகவும் (A-7) சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120B (சதித்திட்டம்), 167, 409 (நம்பிக்கை மோசடி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act, 1988 as amended in 2018) பல்வேறு முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் செல்வாக்கு செலுத்தியது முதல் மதுபான விநியோகத்தில் ஒருசில குறிப்பிட்ட ஆலைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்தது வரை அனைத்து நிலைகளிலும் முறைகேடுகள் பெருமளவில் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசிய விவகாரத்தில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த செந்தில் பாலாஜி, தற்போது டாஸ்மாக் முறைகேடு மற்றும் ஊழல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்திருப்பதை அறிந்து, முந்தைய வழக்கில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றால் போலீசார் கைது செய்வார்கள் என்பதால், அதற்கு பயந்து உடல்நிலையை காரணம் காட்டி தனியார் மருத்துவமனையில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் டாஸ்மாக் வழக்கில் அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தை அவர் நாடி உள்ளார். நீதிமன்றத்தின் தயவால் காவல்துறை கைது நடவடிக்கையில் இருந்து தொடர்ந்து தப்பித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த முறையும் உச்சநீதிமன்றம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஜாமீன் மனுவின் மீதான முடிவை எதிர்பார்த்து மருத்துவமனையில் காத்திருக்கிறார்.

ஆனால் இந்த வழக்கின் தன்மையையும், இதற்கு முந்தைய வழக்குகளில் செந்தில் பாலாஜியின் நடத்தையையும் கவனத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும். அப்படி பார்க்கும்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்பே இல்லை. உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு சிறை செல்வதை தவிர வேறு வழி இல்லை.

Leave a Reply