நாட்டில் புலிகள் எண்ணிக்கையும், புலிகள் காப்பகங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது !– மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த உலக புலிகள் தினம் 2026 கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று உரையாற்றினார். இயற்கையுடன் ஆழமான சமூக தொடர்பையும் பாதுகாப்பையும் சார்ந்த வாழ்க்கை முறையைக் கடைபிடிக்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார். புலிகள் பாதுகாப்பில் இந்தியாவின் சாதனைகளையும் கொண்டாடுவதற்கும் புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், உயர் அரசு அதிகாரிகள், வனவிலங்கு நிபுணர்கள், களப்பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், மாணவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் திரு யாதவ், பாதுகாப்பு என்பது வெறும் வனவிலங்குகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி இயற்கையுடன் சாதகமான உறவை வளர்ப்பதுமாகும் என்று வலியுறுத்தினார். இயற்கை என்பது சுற்றுலா அல்லது பொழுதுபோக்கிற்கான வளமாக மட்டுமின்றி அதை மதித்து மக்கள் அதன் மூலம் அமைதி பெறவேண்டும் என்று கூறினார். இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடிக்குமாறு மக்களை அவர் ஊக்குவித்தார்.

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சாதனைகளைக் குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், புலிகள் எண்ணிக்கை 3,682 ஆகவும், புலி காப்பகங்கள் எண்ணிக்கை 58 ஆகவும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்கள், தேசிய பூங்காக்கள் வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், சமூகக் காப்பகங்கள், ஈரநிலங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply