ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தகவல்.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மீனவர்கள், மீன் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதார நலனை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் வலமாவூரில் மைய அலுவலகத்துடன் கூடிய பன்னோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கும் திட்டம் ரூ.127.71 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நிதியாண்டுகளில் பாரம்பரிய மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம், ஊட்டச்சத்து ஆதரவுக்காக ரூ.84.08 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கிசான் கடன் அட்டை மூலம் இம்மாவட்டத்தில் உள்ள 13,949 மீனவர்களுக்கு ரூ.236.26 கோடி வங்கி கடன் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆழ்கடல் சூரை மீன்பிடிப்புக்காக 45 படகுகள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 19,575 கடல்பாசி வளர்ப்பு மிதவைகளும் 499 கூண்டு மீன் வளர்ப்பு அலகுகளும் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளில், தங்கச்சிமடம் மீன்பிடி இறங்குதளத்தை மேம்படுத்த ரூ.150 கோடியும், குந்துகால் மீன்பிடி இறங்குதளத்திற்கு ரூ.148 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில்நுட்பப் பயிற்சி, தொழில் முனைவோர் திறன் வளர்ப்பதற்காகக் கடந்த 3 ஆண்டுகளில் 88 பயிற்சிகள் மூலம் 5,599 மீனவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply