அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல் துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகத்தின் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026-ஐ இன்று மாநிலங்களவையின் பரிசீலனைக்காக முன்மொழிந்தார்.
மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தத் திருத்த மசோதாவானது, 2024-ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) சட்டத்தின் இயல்பான நீட்டிப்பு என்றும், 2024-ஆம் ஆண்டின் சட்டமும் தற்போதைய திருத்த மசோதாவும் இணைந்து, சுதந்திர இந்தியாவில் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான நாட்டின் முதல் விரிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்குகின்றன என்றும் கூறினார். இந்தச் சட்டம், பொதுத் தேர்வு முறையில் தகுதி, நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அரசாங்கம் தொடர்ந்து வரவேற்கிறது என்றும், சட்டத்தை மேலும் கடுமையாக்கி திறம்படச் செய்யும் நோக்கத்துடன், சமீபத்திய அனுபவங்களையும் கருத்துக்களையும் கருத்தில் கொண்ட பின்னரே இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் விஷயத்தில் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை இந்தத் திருத்தங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, மாணவர்களின் உண்மையான முயற்சிகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கின்றன என்றும் அவர் கூறினார்.
சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், எந்த மாநிலம் அல்லது தேர்வை நடத்தும் முகமையைப் பொருட்படுத்தாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேர்வு தொடர்பான முறைகேடுகள் பதிவாகியுள்ளன என்றும், இது ஒரு வலுவான தேசிய சட்டக் கட்டமைப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறினார்.
மசோதாவுக்கு சபையின் ஆதரவைக் கோரிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், முன்மொழியப்பட்ட திருத்தங்கள், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதோடு, நாட்டின் பொதுத் தேர்வு முறையின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்று கூறினார்.
திவாஹர்
