18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக அனிமேஷன் பயிலரங்கை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவித்தது.

மும்பை சர்வதேச திரைப்பட விழாவை ஏற்பாடு செய்யும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முகமையான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், அனைத்து அனிமேஷன் ஆர்வலர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர, 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக அனிமேஷன் & விஎஃப்எக்ஸ் துறைப் பயிலரங்கில் விலைமதிப்பற்ற நிபுணத்துவத்தைப் பெற அழைக்கிறது.

இந்தப் பயிலரங்கு ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை ஐந்து நாள் நடைபெறவுள்ளது. இது பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய வார்னர் பிரதர்ஸின் அனிமேஷன் பட மூத்தத் திரைப்படத் தயாரிப்பாளரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்போர் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர் மற்றும் விளையாட்டு அனிமேஷன் ஆகியவற்றில் உள்ள தொழில் நுண்ணறிவுகளைப் பெற உள்ளனர்.

திரைப்படங்கள், விஷுவல் எஃபெக்ட்ஸ், விளையாட்டு அனிமேஷன் மற்றும் மொபைல் தளங்களுக்கான வசீகரிக்கும் அம்சங்களின் தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவில் அனிமேஷன் துறை தனித்துவமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இது திறமையான மற்றும் ஆர்வமுள்ள அனிமேஷன் ஆர்வலர்களுக்கான சிறந்த வாய்ப்புகளாக அமைய உள்ளது. இந்தியாவில் அனிமேஷன் துறை வளர்ந்து வருகிறது! 25% வளர்ச்சி விகிதத்துடன் 2023-ம் ஆண்டுக்குள் 46 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் அமையும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இது ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க உள்ளது.

திவாஹர்

Leave a Reply