சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ‘குற்றவியல் நீதி அமைப்பை நிர்வகிப்பதில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற தலைப்பில் நாளை மாநாடு நடத்த உள்ளது.

பழமையான காலனித்துவ சட்டங்களை நீக்கி, குடிமக்களை மையமாகக் கொண்ட மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சட்டங்களைக் கொண்டு வருவதற்காக, நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பை மாற்றியமைக்க மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா, 2023; பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 மற்றும் பாரதிய சாக்ஷய அதினியம், 2023 ஆகிய சட்டங்கள், முந்தைய குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டபடி, இந்த குற்றவியல் சட்டங்கள் 1 ஜூலை 2024 முதல் நடைமுறைக்கு வரும்.

இந்தச் சட்டங்கள் குறித்து குறிப்பாக சம்பந்தப்பட்டவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நாளை அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய்.சந்திரசூட் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் . சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் திரு ஆர் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா, இந்திய அரசின் உள்துறை செயலாளர் திரு அஜய் குமார் பல்லா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மூன்று குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்களை வெளிக்கொணர்வதும், தொழில்நுட்ப மற்றும் கேள்வி பதில் அமர்வுகள் மூலம் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். மேலும், பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் சட்ட மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

ஒருநாள் முழுவதும் நடைபெறும் இந்த மாநாட்டில் மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திவாஹர்

Leave a Reply