85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதை ஊக்குவிக்க தேர்தல் ஆணையம் கூடுதல் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு முன்னோடி முயற்சியாக, இந்திய தேர்தல் ஆணையம் (ECI), முதல் முறையாக, 2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை வழங்கியுள்ளது. இந்தப் பிரிவுகளில் உள்ள வாக்காளர்கள் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த முன்முயற்சி தேர்தல் செயல்முறையில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை உறுதி செய்வதிலும், ஜனநாயக பங்கேற்பை அதிகரிப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சுமார் 81 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சுமார் 90 லட்சம் பேரும் உள்ளனர்.  

இது ஒரு முன்மாதிரியான முயற்சி என இந்தப் பிரிவு வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.  தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு நன்றியையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு இந்த நடைமுறை ஏற்கெனவே தொடங்கி விட்டது. வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் ஒத்துழைப்புடம் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நடைமுறை நடைபெறுகிறது. வாக்குப்பதிவில் ரகசியம் பராமரிக்கப்படுகிறது.

இந்த வசதியைப் பெறுவதற்கான செயல்முறை எளிமையானது. இதில் தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் தகுதியான வாக்காளர்கள் படிவம் 12டி-யைப் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களுடன் மாற்றுத்திறனாளி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply