பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் 5 நாள் 41 வது வழிகாட்டுதல் குழு கூட்டம் புதுதில்லியில் தொடங்கியது.

பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் 41 வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் மார்ச் 18 – 22 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது.

ஐந்து நாள் கூட்டத்தின் முதல் நாளான நேற்று, ஐஐடி தில்லியில் அகாடமிக் அவுட்ரீச் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டது.  அங்கு மாநாட்டு பிரதிநிதிகள் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தொழில்நுட்பங்களின் எதிர்காலம் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கினர்.

தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட், ஹைட்ரஜன் மிகவும் புதிய தொழில்நுட்பம் அல்ல என்றாலும், அதை மிகவும் சிக்கனமாகவும் தூய்மையாகவும் மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இத்துறையில் திறன்மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தவிர, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் பசுமை ஹைட்ரஜனை ஏற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஹைட்ரஜன் மதிப்புச் சங்கிலியில் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகிய ஐந்து கூறுகள் அடங்கும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் எடுத்துரைத்தார்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சுதீப் ஜெயின், பருவநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் சவாலான தன்மை குறித்து எடுத்துரைத்தார். ஹைட்ரஜன் துறையின் ஆற்றல் மாற்றம் மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவதற்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் பணி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். சாம்பல் ஹைட்ரஜனில் இருந்து விலகி, பசுமை ஹைட்ரஜனின் அதிகப் பங்கைக் கொண்டுவருவதன் முக்கியத்துவம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply