லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் 125-வது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளும் மாநில குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர் .

லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (எல்பிஎஸ்என்ஏஏ) 125-வது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநில குடிமைப் பணி அதிகாரிகள் இன்று (மார்ச் 18, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் குடிமைப் பணி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மற்றவர்களை ஊக்குவிக்கும் என்றார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற முறையில், நிர்வாக செயல்பாடு, அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தற்போது தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைகள் அதிகரித்துள்ளன எனவும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு சேவையையும் அவர்கள் கண்காணிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். மாறிவரும் டிஜிட்டல் ஆளுகைக்கு ஏற்ப அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பும், ஒருமித்த கருத்தும் காலத்தின் தேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். குறுகிய காலத்தில் சிறந்த பலன்களை அடைவதற்கு மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளும் போது, அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

திவாஹர்

Leave a Reply